'கொரோனாவ' கூட கட்டுப்படுத்திடலாம் போல... 'இத' கண்ட்ரோல் பண்ண முடிலயே... அதிரடியில் இறங்கிய போலீசார்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக நாடுகளில் கொரோனா பரவும் வேகத்தை விட வதந்திகள் பரவும் வேகம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் எவ்வளவோ கடிவாளம் போட்டும் கூட வதந்தி பரப்புபவர்கள் தங்களது வேலையை செவ்வனே செய்து கொண்டு தான் இருக்கின்றனர். சமீபத்தில் மருத்துவர்களை பொதுமக்கள் தாக்கியது கூட வதந்திகளால் தான் என வெளியான தகவல் அனைவரையும் அதிர வைத்தது.
மேலும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளால் சாமானிய மக்கள் தாங்களாகவே சுய மருத்துவம் செய்துகொண்டு கடைசியில் உயிரை இழப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கர்நாடக மாநில காவல்துறை தனது இணையதளத்தில் புதிய பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளது. இனி செய்திகளின் உண்மைத்தன்மையை 'factcheck.ksp.gov.in’ எனும் தளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம் என அம்மாநில காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''கொரோனா விவகாரத்தையொட்டி மக்களின் அமைதியைக் குலைக்கும் வகையில் போலிச் செய்திகளுடன் வீடியோக்கள், புகைப்படங்கள் பல சமூக ஊடகங்களில் உலவுகிறது. அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. உண்மைத்தன்மையை அறியாமல் பலரும் இதனை தங்களது வட்டத்தில் பரப்பி வருவதால் இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளோம்,'' என தெரிவித்து இருக்கிறார்.