நோய் 'எதிர்ப்பு' சக்தியை அதிகரிக்க... மதிய உணவுடன் சேர்த்து 'இலவச' முட்டை... அசத்தும் மாவட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 10, 2020 03:47 AM

தமிழகம் முழுவதும் தற்போது 144 தடையுத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்களுக்கு உணவு அளிக்கும் வகையில் அனைத்து அம்மா உணவகங்களும் இயங்கி வருகின்றன. காலை வேளையில் இட்லியும், மதிய வேளையில் சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதமும் உணவாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

Salem Corporation Gives Free egg with Lunch in Amma Unavagam

இந்த நிலையில் சேலம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மதிய உணவுடன் இலவசமாக முட்டை வழங்கும் திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதுகுறித்து சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசால் 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டதனை தொடர்ந்து, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்திரவின் பேரில் பொதுமக்களின் நலன் கருதி சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள 11 அம்மா உணவகங்களும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.

அனைத்து அம்மா உணவகங்களிலும் காலை வேளையில் இட்லியும், மதிய வேளையில் சாம்பார் சாதம், தக்காளி சாதம் மற்றும் தயிர் சாதமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 15 நாட்களில் 73 ஆயிரத்து 738 பயனாளிகளுக்கு அம்மா உணவகங்களில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இன்று ( வியாழக்கிழமை) முதல் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலுள்ள 11 அம்மா உணவகங்களிலும், மதிய வேளை உணவுடன் சேர்த்து விலையில்லா முட்டை ஒன்று வழங்கப்படும். ஆதரவற்றோர், வயதானோர், சாலையோரங்களில் வசிப்போர் உள்ளிட்ட அம்மா உணவகங்களில் உணவு உட்கொள்ள வரும் அனைத்து பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வகையில் மதிய வேளை உணவுடன் சேர்த்து விலையில்லா முட்டை வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.