கொரோனா 'நோயாளிகளுடன்'... மணிக்கணக்காக சாலையில் 'காத்திருக்கும்' ஆம்புலன்ஸ்கள்... 'அந்த' நாட்டுக்கே இப்டி ஒரு நெலமையா?
முகப்பு > செய்திகள் > உலகம்மருத்துவமனையில் இடமில்லை என்பதால், கொரோனா நோயாளிகளுடன் சாலையில் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகளை இஷ்டத்துக்கு ஆட்டிப்படைக்கும் கொரோனா தற்போது ரஷ்யாவிலும் தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி இருக்கிறது. அங்கு இதுவரை 15570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 130 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்தில் கொரோனா நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ்கள் மணிக்கணக்காக சாலையில் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உச்சகட்டமாக 15 மணி நேரத்திற்கும் அதிகமாக நோயாளியுடன் காத்திருப்பதாக ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து, ''மாஸ்கோவில் உள்ள மருத்துவமனைகள் தற்போது மிகவும் கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. மருத்துவமனைகள் அனைத்தும் அவசர நிலையில் உள்ளன,'' என தெரிவித்து இருக்கிறார். ஆனால் மாஸ்கோ நகர மேயர், '' நாங்கள் இன்னும் உச்சநிலையை எட்டவில்லை. பாதிக்கும் கீழே தான் இருக்கிறோம். அதனால் எங்களை தயார்படுத்திக்கொள்ள முடியும்,'' என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
இதற்கிடையில் மாஸ்கோ நகரில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை ரஷ்யா துரிதகதியில் கட்டி வருகிறது. மேலும் ரஷ்யா முழுவதும் சுமார் 18 மருத்துவமனைகளை கட்டி வருகிறது. போதிய மருத்துவமனைகள் இல்லாததாலும், நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாலும் அடுத்த 2,3 வாரங்கள் ரஷ்யாவுக்கு மிகுந்த கடினமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
