உலகமே தேடி ஓடும் 'வெண்ட்டிலேட்டர்களை' பார்த்து... 'அச்சம்' கொள்ளும் 'நியூயார்க்' மருத்துவர்கள்... 'புதிய' சிக்கலால் 'திணறல்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 12, 2020 10:29 PM

உலகம் முழுதும் வென்ட்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் நியூயார்க்கில் சில மருத்துவர்கள் வென்ட்டிலேட்டர்களைப் பார்த்து அச்சப்படத் தொடங்கியுள்ளனர்.

US 80% Of New York Coronavirus Patients On Ventilators Die

நுரையீரல் தோல்வி அடையும் நோயாளிகளுக்கு பிராண வாயுவை அளிக்கும் கருவியே வென்ட்டிலேட்டர்களாகும். இந்த கருவியைப் பயன்படுத்த நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தொண்டையினுள் குழாய் ஒன்று செலுத்தப்படும். பொதுவாகவே தீவிர சுவாச நோய் உள்ள நோயாளிகளில் 40 - 50 சதவீதம் பேர் வென்ட்டிலேட்டர்களில் வைத்தாலும் கூட உயிரிழந்துவிடுவார்கள். ஆனால் நியூயார்க்கில் வெண்ட்டிலேட்டர்களில் வைக்கப்பட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் கூறியுள்ளது அங்கு புதிய கவலையாக எழுந்துள்ளது.

இதுபோன்ற வெண்ட்டிலேட்டர் உயிரிழப்புகள் பிரிட்டன், சீனாவிலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சீனாவின் வுஹானில் வெண்டிலேட்டர்களில் வைக்கப்பட்டவர்களில் 86 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்புக்கான காரணம் காரணம் இதுவரை சரியாகத்  தெரியாத நிலையில், ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை வெண்ட்டிலேட்டர்கள் இன்னும் மோசமடையச் செய்ய வாய்ப்பிருப்பதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்னும் சிலர், உயர் அழுத்த பிராண வாயுவை மிகச்சிறிய மூச்சுக்குழாய் மூலம் உட்செலுத்துவதும் பிரச்சனையாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். இதுகுறித்துப் பேசியுள்ள நிபுணரும் மருத்துவருமான எடி ஃபேன்ம், "கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வுகளின்படி மருத்துவ வெண்ட்டிலேஷன் நுரையீரல் நோயை மோசமாக்கவே செய்யும். ஆனால் பிராண வாயு உட்செலுத்தும் அழுத்தத்தைக் குறைக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக மற்ற நோயாளிகள் 2 முதல் 3 நாட்கள் வெண்ட்டிலேட்டர்களில் வைக்கப்படும் நிலையில், தீவிர கொரோனா பாதிப்புள்ள நோயாளிகள் 10 முதல் 15 நாட்கள் வெண்ட்டிலேட்டர்களில் வைக்கப்படுகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை சரிவர முடிவு எதுவும் தெரியாத நிலையில் மருத்துவர்கள் பலர் நோயாளிகளைக் காப்பாற்ற வெண்ட்டிலேட்டர்களை பயன்படுத்த முடியாததால் செய்வதறியாது திணறி வருவதாக கூறப்படுகிறது.