“அரசு மட்டும்தான் அருள் செய்ய வேண்டுமென்றால்..”- வைரமுத்து ட்வீட்.. “உதவி செய்றத தடுக்கும் நோக்கம் இல்லை”- தமிழக அரசு மறுவிளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 13, 2020 02:06 PM

தன்னார்வலர்கள் கொரோனா நிவாரண உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்தது குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

vairamuthu reaction,TNGovt explanation to volunteers help in lockdown

தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக தன்னார்வலர்கள், உணவு தேவைப்படுவோர்க்கு உணவு வழங்குவதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை அடுத்து பலரும் இதுகுறித்த கருத்துக்களை தெரிவித்தனர். இதனிடையே கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டரில்,  “அரசு மட்டும்தான் அருள் செய்ய வேண்டுமென்றால், அறமென்பதெதற்காக?.. ஆணிவேர் மட்டும்தான் நீர் வழங்கவேண்டும் என்றால் பக்கவேர்கள் எதற்காக?” என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, தன்னார்வலர்கள் கொரோனா சூழலில் நிவாரணம் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு கட்டுப்பாடுகளை விதித்ததாக கூறியிருந்த தமிழக அரசு, மீண்டும் விளக்கமளித்து, அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, “சுனாமி, வெள்ளம், பல்வேறு வகையான புயல்  வேளைகள் தன்னார்வலர்கள் செய்த தொண்டுகளை அரசு மனமுவந்து பாராட்டவே செய்தது. ஆனால் சமூக சேவை செய்யும் தன்னார்வலர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், தன்னார்வ சேவைகளை ஒருங்கிணைத்து மக்களிடம் கொண்டு சேர்க்க மாநகர, மாவட்ட, நகர, அதிகாரிகள் மற்றும் பேருராட்சி மற்றும் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோருன் இணைந்து செயல்படுமாறுதான் கேட்டுக்கொள்கிறோம். தவிர இதற்கென தமிழ்நாடு அரசு கட்டமைத்திருக்கும் stopcorona.tn.gov.in தளத்தில் தன்னார்வலர்கள் தங்களை பதிந்துகொண்டு அரசு அதிகாரிகளின் வழிகாட்டுலடன் இணைந்து இந்த சேவைகளில் ஈடுபடலாம். அரசின் நோக்கம் உதவி செய்வதை தடுப்பதல்ல், நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதுதான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.