மற்ற நாடுகளும் 'இதை' செய்ய வேண்டி வரும்... சீனாவின் 'தவறு' குறித்து... உலக சுகாதார அமைப்பு 'கருத்து'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 18, 2020 04:56 PM

சீனா கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் திருத்தம் செய்தது போன்ற நிலை அனைத்து நாடுகளுக்கும் வரலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

All Will Face This WHO After China Revises Wuhans Corona Deaths

சீனாவின் வுஹான் நகரில் முதல்முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் புரட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனாவின் வுஹான் நகரில் அதிகாரப்பூர்வமான உயிரிழப்பு எண்ணிக்கை 2,579 என கூறப்பட்டிருந்த நிலையில், அதில் 1,290 உயிரிழப்புகள் தற்போது கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வுஹானில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,869 ஆகவும், நாடு முழுவதுமான மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 4632 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும் முன்னர் இந்த உயிரிழப்புகளை கணக்கிட தவறிவிட்டதாக  சீனா தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் மருத்துவமனைக்கு வராமலேயே பலர் உயிரிழந்தது போன்ற காரணங்களால் இந்த உயிரிழப்புகள் முன்னர் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. சீன அரசு கூறும் கொரோனா உயிரிழப்புகளை விட நிச்சயம் அங்கு உண்மையான எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக இருக்கலாம் என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துவந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள உலக சுகாதார அமைப்பை சேர்ந்த  மரியா வான் கெர்கோவ், "கொரோனா தரவுகளில் சீனா திருத்தம் செய்திருப்பது அனைவருடைய பெயரையும் ஆவணப்படுத்தும் முயற்சியே ஆகும். கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை அடையாளம் காணும் பணி ஒரு சவாலாகவே உள்ளது. மற்ற நாடுகளுக்கும் சீனாவிற்கு ஏற்பட்ட இதே நிலை ஏற்படலாம். எனவே உலக நாடுகள் கொரோனா பதிவுகளை மறுஆய்வு செய்து பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான், "மற்ற நாடுகளும் சீனாவை போன்றே செயல்படும். ஆனால் விரைவில் கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான துல்லியமான புள்ளிவிவரங்களை தயாரிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.