இனிமே 'அந்த' மாதிரி செய்யக்கூடாது... அரிசி, காய்கறிகளுடன்... விவசாய இளைஞரின் 'வீட்டிற்கே' சென்ற எஸ்.பி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமீபத்தில் திருவள்ளுவர் மாவட்டம் அகரம்கண்டிகை கிராமத்தை சேர்ந்த விவசாய இளைஞர் கார்த்திக் தன்னுடைய நிலத்தில் விளைந்த காய்கறிகளை எடுத்துக்கொண்டு திருநின்றவூர் சந்தைக்கு சென்றிருக்கிறார். தாமரைக்குளம் அருகே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி நீண்ட நேரம் நிற்க வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் வெறுத்துப்போன கார்த்திக் அந்த வழியாக ரோந்து வந்த பயிற்சி டி.எஸ்.பி மணிமேகலையின் வாகனத்தின் முன்னால் காய்கறிகளை கொட்டிவிட்டு கோபத்துடன் சென்று விட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய மணிமேகலை திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தனுக்கு இதுகுறித்து தகவல் அளித்தார். இதையடுத்து அரவிந்தன் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசனுடன் அகரம்கண்டிகை கிராமத்துக்குச் சென்று, விவசாயி கார்த்திக்கை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி 50 கிலோ அரிசி, 2 மூட்டை காய்கறி மற்றும் அப்துல் கலாம் புத்தகம் ஒன்றையும் கார்த்திக்கு வழங்கி, 'இனிமேல் அப்படி செய்யக்கூடாது' என அறிவுரை அளித்திருக்கிறார். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட கார்த்திக்கின் வீடு தேடிவந்து எஸ்.பி அவருக்கு அரசி, காய்கறிகளை வழங்கி சென்றது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
