‘பசிக்கு தண்ணிய குடிச்சுட்டு இருக்கும்’.. குழந்தைங்க ‘பசிக்குதுனு’ அழுறாங்க.. ஊரடங்கால் கண்ணீர் வடிக்கும் குடும்பங்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 18, 2020 09:32 AM

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் சாப்பிட வழியில்லாமல் பசிக்கு தண்ணீரை குடித்து வருவதாக சாட்டியடி தொழில் செய்யும் குடும்பங்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

Madurai village people affected by coronavirus lockdown

மதுரை அருகே சக்கிமங்கலம் என்ற கிராமத்தில் சுமார் 850 வசித்து வருகின்றனர். அன்றாடம் தொழில் செய்து சாப்பிட்டு வந்த இவர்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளதால் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் உணவு பொருள்கள் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் பசியால் வாடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த அவர்கள், ‘இங்கு சாட்டையடி தொழில் செய்து வரும் 170 குடும்பங்களை சேர்ந்த சுமார் 850 பேர் இருக்கிறோம். எங்களுக்கு பசி புதிதல்ல. ஆனால் தற்போது ஒருவேளை சாப்பாடு பாக்கியம் கூட பறி போய்க் கொண்டிருக்கிறது. சாட்டை அடித்து தொழில் செய்ய சுற்றியுள்ள ஊர்களுக்கு செல்வது வழக்கம். நாள் முழுவதும் சாட்டை அடித்ததில் கிடைத்த பணத்தை வைத்து இரவு ஒருவேளை தான் வீட்டில் சமைப்போம். இரவு சமைத்த அந்த உணவையே அடுத்த நாள் காலையிலும் சாப்பிடுவோம். மதிய சாப்பாடு என்பதே இங்குள்ள மக்கள் நினைவில் இருந்ததில்லை. இப்படிதான் எங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகிறோம்.

ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் சமைக்க உணவு பொருள்கள் இல்லாமல் உள்ளோம். ஊரடங்கு நீட்டிப்பதற்கு முன்பு ஒரு சில தொண்டு நிறுவனங்கள் மளிகைப் பொருள்கள் கொடுத்தனர். அந்த பொருள்கள் சில நாள்களுக்கு எங்களின் பசியை போக்கியது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தொழிலுக்கு செல்ல முடியாமலும், உதவிகள் கிடைக்காமலும் சில தினங்களாக பசிக்கு தண்ணீரைதான் நாங்கள் குடித்து வருகிறோம்.

சில இடங்களில் உதவி கேட்டோம். 850 பேருக்கு உதவ யோசிக்கிறார்கள். அவர்களால் முடிந்த அளவுக்கு உதவினால் சிலரின் பசியாவது அடங்கும். பெரியவங்க நாங்களெல்லாம் பசிய பொறுத்துப்போம், ஆனால் குழந்தைகளால் பசியை சொல்லாமல் இருக்க முடியவில்லை. பசிக்கிறது என சொல்லி அவர்கள் அழுகின்றனர்’ என கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

News Credits: Vikatan