'கொரோனா' பீதியால் 'சிறையில்' கலவரம்... '23 கைதிகள்' சுட்டுக் கொலை... '30 போலீசார் படுகாயம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 24, 2020 10:25 AM

கொரோனா பீதி காரணமாக கொலம்பியாவில் உள்ள சிறையில் கலவரம் வெடித்ததையடுத்து, 23 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

23 prisoners shot dead in jail due to Corona panic

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமாக உள்ளது. அங்கு இதுவரை 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர்.  வைரஸ் பரவுவதை தடுக்க அந்த நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்ட நடவடிக்கையாக இன்று முதல் நாடு தழுவிய தனிமைப்படுத்தல் தொடங்குகிறது. இது 19 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த நாட்டில் சிறைகளில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருப்பதோடு, சுகாதார நடவடிக்கைகளும் மோசமாக இருப்பதால் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும்  அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள 132 சிறைகளில் கைதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள சிறைகளில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

இந்த நிலையில் தலைநகர் போகோடாவில் உள்ள நாட்டின் மிகப்பெரிய சிறையில் கைதிகள் நடத்திய போராட்டத்தின் போது திடீர் கலவரம் வெடித்தது. இதை பயன்படுத்தி கைதிகள் பலர் சிறையை உடைத்து தப்பி ஓட முயற்சித்தனர்.

இதையடுத்து சிறையில் கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களுடன் கைதிகள் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் கைதிகள் 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 83 பேர் படுகாயம் அடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட போலீசாரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : #CORONA #FEAR #JAIL #PRISONERS #SHOT DEAD #COLUMBIA