'பொழப்புக்காக இங்க வந்து டாக்சி ஓட்டுறாங்க'...'நொறுங்கிய 'அமெரிக்கா'... இந்தியர்களுக்கு நேர்ந்த கோரம்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா ருத்திர தாண்டவம் ஆடி வரும் நிலையில், அங்கு 11 இந்தியர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இந்தியர்களின் பின்னால் மறைந்திருக்கும் சோகமும் தற்போது வெளிப்பட்டுள்ளது.

அமெரிக்கா தற்போது மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் தவித்து வருகிறது என்றே சொல்லலாம். மற்ற நாடுகளை காட்டிலும் அங்கு பாதிப்பு என்பது மிக மோசமாக உள்ளது. அந்நாட்டில் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. 14 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்தநிலையில் அங்கு வசித்துவந்த 11 இந்தியர்கள் கொரோனாவால் பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இந்தியர்களில் 10 பேர் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர்கள். இதில் சோகம் என்னவென்றால் இறந்தவர்களில் 4 பேர் நியூயார்க்கில் டாக்சி ஓட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். இது இந்தியாவில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
குடும்ப சூழ்நிலைக்காக அமெரிக்கா சென்று அங்கு டாக்சி ஓட்டியவர்கள் இப்படி அநியாயமாக இறந்து விட்டார்களே என, இறந்தவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். கொரோனா தடுப்புக்காக கட்டுப்பாடுகள் கடுமையாக இருப்பதால், இறந்தவர்களின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நெருங்கிய உறவினர்களுக்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது.
இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகங்கள் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதில் கவனம் செலுத்திவருகிறது.
