'ஹைட்ராக்சிகுளோரோகுயின் மீது...' 'ட்ரம்ப் விடாப்பிடியாக இருப்பது ஏன்?...' 'சந்தேகம்' எழுப்பும் 'நியூயார்க் டைம்ஸ்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயினை கொள்முதல் செய்வதில் ட்ரம்ப் விடாப்பிடியாக இருப்பது ஏன்? என அமெரிக்க பத்திரிகைகள் கேள்வி எழுப்பியுள்ளன.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மலேரியா சிகிச்சைக்குப் பயன்படும் மருந்து, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்த மருந்து இதயநோய் உள்ளவர்களுக்கு ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனாலும் தனது ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பின்போதும், ஹைட்ராக்சிகுளோரோகுயினை கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு அதிபர் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
அமெரிக்காவின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பான FDA ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்த முதலில் அனுமதியளித்திருந்தது. ஆயினும் அந்நாட்டு மருத்துவர்கள் கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயினை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை என அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த மருந்தின் நம்பகத்தன்மை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதைப் பயன்படுத்துவதால் என்ன இழப்பு வந்துவிடப்போகிறது என்று ட்ரம்ப் பல முறை அழுத்தந்திருத்தமாகக் கூறிவிட்டார் .
ஹைட்ராக்சிகுளோரோகுயினைப் பயன்படுத்தக் கூறுவதால் மருந்து நிறுவனங்களுக்குத்தான் அதிக லாபம் கிடைக்கப் போவதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன. அதுமட்டுமில்லாமல் ஹைட்ராக்சிகுளோரோகுயின் அடங்கிய பிளாக்கெனில் என்ற மருந்ததைத் தயாரிக்கும் சனோஃபி என்ற பிரான்ஸ் நாட்டு மருந்து நிறுவனத்தில் ட்ரம்புக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் நிதிசார்ந்த தொடர்பு இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிடமிருந்து 2.9 கோடி மாத்திரைகளை அமெரிக்கா கொள்முதல் செய்திருந்தது. ஏற்கெனவே சுமார் 3 கோடி அளவுக்கு இந்த மருந்தை அமெரிக்கா சேமித்து வைத்திருப்பதாகவும் அந்த இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இன்னும் கூடுதலாக மருந்து தேவை எனவும் கேட்டிருக்கிறது.
பக்கவிளைவுகள் உள்ள மருந்துக்கு இந்த அளவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவாகப் பேசிவருவது, அவருக்கு எதிரான விவாதத்தை உருவாக்கியிருப்பதுடன், அமெரிக்காவை தவறாக வழிநடத்துவதாகவும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது.
