‘சொமாட்டோ’க்கு ரூ.1 லட்சம் அபராதம்..! சென்னை மாநகராட்சி அதிரடி..! காரணம் என்ன..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Oct 21, 2019 09:41 AM
பிரபல உணவு விநியோக நிறுவனமான சொமாட்டோவின் அலுவலகத்துக்கு சென்னை மாநகராட்சி 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மழை நீர் தேங்குவதால் உருவாகும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவும் அபாயம் உள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள உணவு நிறுவனமான சொமாட்டோ அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சுகாதாரத் துணை ஆணையர் மதுசுதன் ரெட்டி ‘தி நியுஸ்மினிட்’ பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ‘சேத்துபட்டு பகுதியில் அமைந்துள்ள சொமாட்டோ அலுவலகத்தின் மாடியில் பயன்படுத்தப்படாத டெலிவரி பைகள் வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் ஆய்வு செய்ய சென்றபோது அந்த பையில் மழை நீர் தேங்கி இருந்தது. இதன்மூலம் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் இருப்பதால் சொமாட்டோ நிறுவனத்துக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தோம்’ என பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், ‘இந்த தவற்றை ஒப்புக்கொண்ட சொமாட்டோ நிறுவனம், அபராத தொகையை செலுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் அலுவலகத்தை சுத்தமாக வைத்திருக்கவும் உறுதி அளித்துள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறோம். மக்கள் சுகாதாரம் தொடர்பான விஷயம் என்பதால் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். ஒரு இடத்தில் கொசு உற்பத்தியாகிவிட்டால், 300 மீட்டர் தூரத்தில் இருப்பவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள்’ என சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துணை ஆணையர் மதுசுதன் பேசியுள்ளார்.