'சர் சர்ன்னு வேகமா போச்சு'...'முகமூடி அணிந்து சென்ற இளம்பெண்'...'சென்னையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Dec 26, 2019 04:49 PM
சென்னையில் பைக் ரேசில் ஈடுபட்ட 158 வாலிபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுடன் இளம் பெண் ஒருவரும் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு சென்னையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன. இந்நிலையில் பிராத்தனை முடிந்து வரும் நேரத்தில், ஏராளமான இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டு வாகன ஓட்டிகளை நிலைகுலைய செய்தார்கள்.
குறிப்பாக சென்னை காமராஜர் சாலை, அண்ணாசாலை, ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணா மேம்பாலம், ஜி.எஸ்.டி. சாலை, சர்தார் பட்டேல் சாலை ஆகிய சாலைகளில் ஏராளமான இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து, போக்குவரத்து போலீசார் மேற்கண்ட சாலைகளில் குவிக்கப்பட்டனர்.
போக்குவரத்து போலீசாருக்கு துணையாக, சட்டம்-ஒழுங்கு போலீசாரும் நடவடிக்கையில் இறங்கினார்கள். குறிப்பிட்ட சாலைகளில் வாகன சோதனையும் நடத்தப்பட்டன. அப்போது அந்த சாலைகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டி ரேசில் ஈடுபட்ட 158 வாலிபர்களை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இளைஞர்கள் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களில் 126 பேர் மீது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்றதாக 2 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முகமூடி அணிந்து கொண்டு அதிவேகமாக மொபட் ஓட்டிச் சென்ற இளம்பெண் ஒருவரும் காவல்துறையினரிடம் சிக்கினார்.
அதிவேகமாக சென்ற அந்த இளம்பெண்ணை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். பைக் ரேசில் ஈடுபட்டதாக இளம்பெண் ஒருவரும் சிக்கியுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.