‘தாத்தா’ எப்டி இருக்கீங்க... ‘அன்பாக’ பேசிய மர்மநபர்... ‘பைக்கில்’ கூட்டிட்டுப் போய் செய்த காரியம்... ‘சென்னை’ முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 22, 2019 04:25 PM
சென்னையில் வங்கியில் பென்ஷன் பணம் எடுத்து வரச் சென்ற முதியவரை, அன்பு நிறைந்த வார்த்தைகளால் பேசி, பைக்கில் கொண்டுபோய் விடுவதாகக் கூறி, 20 ஆயிரம் பணத்தை, மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் தியாகப்ப தெருவைச் சேர்ந்தவர், சதாசிவம் (93). மீன்வளத்துறையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். முதியவரான இவர், தனது இரண்டாவது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை முதியவர் சதாசிவம், தனது பென்ஷன் பணத்தை வங்கியில் இருந்து எடுக்க அருகில் உள்ள இந்தியன் வங்கிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
வங்கிக்கு அருகில் முதியவர் சென்றபோது, அங்கே அவரை வழிமறித்த, ஹெல்மெட் அணிந்த 40 வயது மதிக்கதக்க மர்ம நபர் ஒருவர், இரு சக்கர வாகனத்தில் வந்து, ‘தாத்தா நல்லா இருக்கீங்களா?, எங்க போய்ட்டு இருக்கீங்க?’ என பாசமாகக் கேட்டுள்ளார். தாத்தாவும் பதிலுக்கு, ‘தம்பி, நீங்க யாருன்னு தெரியலையே’ என்று சொல்ல, ‘நம்ம வீட்டுக்கு பக்கத்து வீடு தான் தாத்தா’ என அந்த மர்ம நபர் கூறியுள்ளார். பின்னர் அந்த நபரிடம் இருந்து விடைப்பெற்று சென்ற முதியவர், வங்கிக்குள் சென்றுவிட்டு, 20 நிமிடம் கழித்து வந்துள்ளார்.
அப்போதும் வங்கி வெளியில் காத்துக் கொண்டிருந்த அந்த மர்ம நபர், ‘வாங்க தாத்தா உங்களை கொண்டுபோய் வீட்டில் விடுகிறேன்’ என்று கூறி, தனது பைக்கில் ஏறிக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். வயதானவர் என்பதால், முதியவரான தாத்தாவும் பைக்கில் ஏறியுள்ளார். அப்போது, அவரது கையில் இருந்த பையை கொடுங்க தாத்தா, நான் முன்னாடி வைத்துக்கொள்கிறேன் என்று கூறி, பைக் முன்னாடி அந்த மர்ம நபர் வைத்துள்ளார். பின்னர் முதியவர் சதாசிவம் வீடு உள்ள தெருமுனையில் கொண்டுபோய் இறக்கி விட்ட மர்மநபர், தாத்தாவின் பையை அவரிடமே கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
அதன்பின்னர் வீட்டுக்கு முதியவர், பையைத் திறந்துப் பார்த்தப்போது, அதில் வங்கியில் இருந்து எடுத்துவந்த 20,00 ரூபாய் பென்ஷன் பணம் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போதுதான் அன்பு நிறைந்த வார்த்தைகளால் தாத்தா, தாத்தா என்று கூறி மர்மநபர் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் முதியவர் சதாசிவம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வங்கி அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.