'தொடரும் சோகம்...' 'தூத்துக்குடியில்' போலீசாரால் தாக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை...' 'விசாரணை' வேண்டும் என உறவினர்கள் 'குமுறல்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி அருகே போலீசாரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி என்ற கட்டடத் தொழிலாளி, கடந்தஒரு வாரத்திற்கு முன்பு மது போதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது தள்ளாடி கீழே விழுந்து விட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கணேச மூர்த்தியை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கணேச மூர்த்தியின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு கணேசமூர்த்தி திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து போலீசார் தாக்கியதில் ஏற்பட்ட அவமானத்தினாலும், வலியினாலும் தான் கணேசன் தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதுகுறித்து குறிப்பிட்ட உறவினர்கள், கணேசனை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பு கடுமையாக அடித்து தாக்கியுள்ளனர். அவரது உடலில் காயங்கள் உள்ளன. இதனால் உடல் வலியிலும், மன உளைச்சலிலும் இருந்த கணேசன் தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
சாத்தான்குளத்தில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு, போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் இறப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற நிகழ்வுகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில், " கணேசமூர்த்தி மதுகுடித்துவிட்டு சாலையில் விழுந்து கிடந்த தகவல் கிடைத்தது. உடனே, உளவுத்துறை போலீசார் ஒருவருடன் 2 காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்ததில் அடிபட்டு கிடந்தவரை எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தோம். அதன்பிறகு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.