"உடம்பெல்லாம் ரத்தம்.. தம்பி நெஞ்சு முடியெல்லாம் பிச்சு..".. சாத்தான்குளம் சம்பவம்.. கதறித்துடித்த பெண்!.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் இருவரையும் கடந்த 19ஆம் தேதி இரவு 8 மணி அளவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை திறந்திருந்ததாகக் கூறி சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனை அடுத்து சிறையில் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மகன் பென்னிக்ஸ், அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 22-ஆம் தேதி உயிரிழந்ததும், அதை தொடர்ந்து அவரது தந்தை ஜெயராஜ் 23-ஆம் தேதி காலை உயிரிழந்ததும் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதனை அடுத்து மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.
இதனிடையே போலீஸார் எஃப்.ஐ.ஆரில், “அப்பாவும் மகனும் எங்களை அவதூறாகப் பேசி தரையில் புரண்டதால், அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இதுபற்றி பேசிய, பென்னிக்ஸின் சகோதரி, “வெள்ளிக்கிழமை போலீஸ்காரங்க எல்லாம் சேர்ந்து கழுத்தப் புடிச்சு தள்ளி எங்க அப்பாவை அடிச்சப்போ, கேக்க போன என் தம்பியையும் அடிச்சுருக்காங்க. விசாரணைனு அழைச்சுட்டு போய், கேட்டெல்லாம் பூட்டி, தம்பியின் வழக்கறிஞர் நண்பர்களை கூட உள்ள விடாம, யாரையும் உள்ள விடாம, மகன் முன்னாடி அப்பாவையும் அடிச்சு, உடம்பு முழுக்க ரத்தம் வரும் அளவுக்கு விடிய விடிய நள்ளிரவு 1.30 மணிவரை அத்தனை போலீஸும் போட்டு அடிச்சுருக்காங்க. அவனுக்கு நெஞ்சுமுடி அவ்ளோ இருக்கும். ஆனா அந்த நெஞ்சு முடியெல்லாம் புடுங்கிட்டாங்க. போலீஸ் கிட்ட நம்மளால போராட முடியுமா? அடிச்சுட்டீங்கள்ல.. விட்ருங்கனு கேட்டதுக்கு கூட விடவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. நான் என் சகோதரிகளும் விஜயவாடா, கொயமுத்தூர்னு வேற வேற இடங்களில் இருந்தோம். அடுத்த நாள் சனிக்கிழமை டாக்டரும் கைவிரிச்சுட்டார்.” என்று உருகிக் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், போலீஸார் லத்தியால் பென்னிக்ஸின் ஆசனவாயில் குத்தினார்களா என நிரூபர்கள் கேட்டதற்கும் பென்னிக்ஸின் சகோதாரி ஆமாம் என்று கூறி அழுதார்.