'கண்டவரோட சேத்து வெச்சா பேசுற'.. 'இனி நான் நிம்மதியா இருப்பேன்'.. மனைவி அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jun 18, 2019 03:57 PM
30 வருடங்களாக கணவர் செய்த சித்ரவதைகளையும், பலருடன் சம்மந்தப்படுத்தி தவறுதலான முறையில் பேசி துன்புறுத்தியதாலும், காத்திருந்து தனது கடைசி கடமையை, பகையை முடித்துக்கொண்டதாக, கணவனைக் கொன்ற மனைவி கொடுத்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கீழ மாளிகைத் தெருவில் வசித்து வந்தவர் ராமு. இவருக்கும் அசலாம்பாளுக்கும் திருமணமாகி 30 ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களின் மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலையில் இருக்கின்றனர். இத்தனை ஆண்டு காலமும் ராமு, தனது மனைவியை அசலாம்பாளை குடித்துவிட்டு வந்து தகாத முறையில் பேசுவது, அடிப்பதும், அக்கம் பக்கத்தினருடன் தொடர்பு படுத்தி பேசுவதுமாக இருந்துள்ளார்.
இதனால் இருவரும் பல காலமாக பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் ஊர் திருவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சியைகண்டுவிட்டு வீட்டுக்கு வந்து படுத்த ராமுவை, அசலாம்பாள் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் கோவிலுக்கு வந்து சூடமேற்றி, தன்னுடைய 30 வருட பகையை முடித்துவிட்டதாகக் கூறியுள்ளார். அதைப் பார்த்த பொதுமக்கள் அசலாம்பாளின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, ராமு ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.
இதன் பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அசலாம்பாளிடம் கணவர் ராமுவைக் கொன்றது தவறில்லையா? என கேட்டபோது, 30 வருடங்களாக மனதில் இருந்த பகையை, தான் முடித்துக்கொண்டதாகவும், ஒரு பாரத்தை இறக்கி வைத்தது போல் இருப்பதாகவும், கணவரைக் கொன்றதற்காக, தான் கொஞ்சமும் வருத்தப்படவில்லை என்றும் இந்த சம்பவம் தன்னைப் போல பெண்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்றும் அசலாம்பாள் கூறியுள்ளார்.
மேலும், கணவரின் சித்ரவதையில் இருந்து, விடுதலையாகி, சிறையில் சுதந்திரமாக இருக்கப்போவதாகக் கூறிய அசலாம்பாளின் பேச்சைக் கேட்ட போலீஸார் ஆச்சர்யத்தில் உறைந்துள்ளனர்.
