'கொரோனா' பரவுதுன்னு வீட்டுக்கு வர சொன்னப்போ... வேல தான் 'முக்கியம்'னு இருந்தவரு... உயிரிழந்த 'இன்ஸ்பெக்டர்' மனைவி 'கண்ணீர்' பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், நாடெங்கும் பணியில் இருக்கும் போலீசார்களும் அதிகளவில் இந்த கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு சென்னை மாம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலமுரளி கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் காவல்துறை அதிகாரி பாலமுரளி ஆவர்.
இதனையடுத்து, மறைந்த இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் மனைவி தனது கணவரின் மரணம் குறித்து கூறுகையில், 'எனது கணவர் மிகவும் ஆரோக்கியமான மனிதர். அவருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கொரோனா அதிகம் பரவ ஆரம்பித்த போது எனது கணவரின் தாயார் அவரிடம் விடுமுறை எடுத்துவிட்டு வீட்டிற்கு வருமாறு அறிவுறுத்தினார். ஆனால், அவர் நாம் இறங்கிய வேலையை செய்து முடிக்க வேண்டும் என்றும், நம்மால் முடிந்த உதவியை அரசுக்கு செய்ய வேண்டும் என்றும் எங்களிடம் கூறினார். அதே போல இந்த இக்கட்டான சூழ்நிலையில் கஷ்டப்பட்ட பலருக்கு தன்னாலான உதவியையும் எனது கணவர் ஒரு போலீஸ் அதிகாரியாக செய்து கொடுத்தார்' என்றார்.
மேலும், 'அவருக்கு அறிகுறிகள் தென்பட்டதும், வீட்டிற்கு வந்தால் தனது குழந்தைகளுக்கு பரவுமே என்று வீட்டிற்கு கூட வராமல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால் அடுத்த 10 நாட்களுக்குள் நிலைமை தலைகீழானது. திடீரென நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. கடைசியாக வீடியோ கால் வழியில் பேசிய போது, 'நீங்கள் பயப்படுகிறீர்களா?' என கேட்டேன். அதற்கு அவர், இல்லை, நான் தைரியமாக இருக்கிறேன். நல்லபடியாக வீட்டிற்கு திரும்புவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்தார். திரும்ப வரமாட்டார் என தெரிந்திருந்தால் வீட்டிலேயே அவரை என்னுடன் வைத்திருப்பேன்' என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
முன்னதாக சில தினங்களுக்கு முன் பாலமுரளி மரணம் தொடர்பாக வைரலான வீடியோ அவர்களின் குடும்பம் இல்லை என பாலமுரளி மனைவி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.