'சைக்கிளிங் போன கௌதம் கார்த்திக்கின் செல்போனை தட்டி தூக்கிய திருடர்கள்!'.. போனை என்னப்பா செஞ்சீங்க? சிக்கியதும் சொன்ன ‘வைரல்’ பதில்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ஆழ்வார்பேட்டையில் சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபட்ட நடிகர் கௌதம் கார்த்திக்கின் விலை உயர்ந்த செல்போனைப் பறித்து சென்றவர்களை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

நடிகர் கௌதம் கார்த்திக், ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் கடந்த டிசம்பர் 2-ம் தேதி அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த செல்போன் திருடர்கள், நடிகர் கௌதம் கார்த்திக்கின் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கௌதம் கார்த்திக் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீஸார் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் செல்போனைத் தேடிவந்தனர்.
இந்நிலையில் போலீஸாருக்கு கௌதம் கார்த்திக்கிடம் செல்போன் பறித்துச் சென்றவர்கள் பற்றிய தகவல் கிடைத்துது. போலீஸார் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரித்தபோது பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சரத் மற்றும் மயிலாப்பூர் குயில் தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் என தெரியவந்தது. அதுமட்டுமின்றி ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பைரூஸ்கான் என்பவரிடம், திருட்டு செல்போனை விலைக்கு வாங்கியது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
போலீஸார் இதுகுறித்து கூறுகையில், நாங்கள் நடிகர் கௌதம் கார்த்திக்கின் செல்போன் ஐ.எம்.இ.ஐ நம்பரை வைத்து விசாரித்துக் கொண்டிருந்த நிலையில், புதிய சிம்கார்டு ஒன்று திருடிச்செல்லப்பட்ட செல்போனில் பயன்படுத்தப்பட்ட தகவல் சைபர் க்ரைம் போலீஸாருக்கு தெரியவந்தது. இதனிடையே செல்போனைத் திருடியவர்களைத் சிசிடிவி மூலம் தேடிவந்தோம். கௌதம் கார்த்திக்கின் செல்போன் ஐ.எம்.இ.ஐ மூலம் கிடைத்த தகவலின்படி ராயப்பேட்டையைச் சேர்ந்த பைரூஸ்கானைப் பிடித்தோம். பைரூஸ்கான் கொடுத்த தகவலையடுத்து குயில் தோட்டத்தைச் சேர்ந்த இருவரைப் பிடித்து விசாரித்து வருகிறோம் என்று கூறினர்.
போலீசாரின் விசாரணையில் செல்போன் திருடர்கள், “நாங்கள் திருடிச்சென்ற செல்போன், நடிகர் கெளதம் கார்த்திக்கினுடையது எனத் தெரியாது. செல்போனை வழக்கம் போலத் திருடி விற்றோம்” என காவல் நிலையத்தில் தெரிவித்ததாக போலீஸார் கூறினர். அதனைத்தொடர்ந்து செல்போன் திருடர்களிடம், செல்போனை எவ்வளவு ரூபாய்க்கு விற்றீர்கள் எனவும், அவர்கள் இருவரின் மீதும் வேறு ஏதாவது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா எனவும் மயிலாப்பூர் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர்.
செல்போன் கிடைத்த தகவலை நடிகர் கௌதம் கார்த்திக்கிடம் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். எனினும் முறையான சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட, பறிக்கப்பட்ட அந்த செல்போனை கௌதம் கார்த்திக்கிடம் ஒப்படைக்க எண்ணியுள்ளனர் காவல்துறையினர்.

மற்ற செய்திகள்
