'சோழன் காலத்து கோயிலில்'.. 'பிரம்மாண்ட தங்கப் புதையல்'.. தரமறுத்த ஊர்மக்கள்!.. காரை மறித்ததால் 2 கி.மீ நடந்தே சென்ற கோட்டாட்சியர்.. க்ளைமேக்ஸ் என்ன?.. விறுவிறு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காஞ்சிபுரம் - உத்திரமேரூர் குழம்பரேஸ்வரர் கோவில் 500 ஆண்டுகள் பழமையானது. இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த குழம்பரேஸ்வரர் கோவில் புனரமைப்புப் பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி, பொதுமக்களே களத்தி இறங்கி சீரமைக்கத் தொடங்கி ஜே.சி.பி இயந்திரம் கொண்டு கருவறை நுழைவு வாயிலின் முன்பாக உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை அகற்றினர்.

அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் துணியால் சுற்றப்பட்ட சுமார் 100 சவரன் அளவிலான ஆபரணங்களும் நாணயங்களும் சிறிய அளவிலான மூட்டையில் இருந்தன. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரிடம் ஊர் மக்கள் புதையலை ஒப்படைக்க மறுத்ததுடன், அந்த நகைகளை கோவிலிலேயே வைத்து புதைக்க வேண்டும் என்றும் வாதம் பண்ணியுள்ளனர்.
மேலும் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையை புறக்கணித்த ஊர்மக்கள் பாதியிலேயே எழுந்தும் சென்றுவிட்டனர். இதற்கு நடுவில் மூதாட்டி ஒருவர் அருள் வந்தவராக எழுந்து ஆடி, ஊரைவிட்டு நகைகளை எடுத்துச் சென்றால், ஊர் மக்களுக்கு தீங்கு நடக்கும் என்று பேசினார். எனினும், புதையலை ஒப்படைக்காவிட்டால், விளைவுகள் கடுமையாக நடக்கும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
பின்னர் பணிந்துபோன கிராம மக்கள் நகைகளை ஒப்படைக்க சம்மதிக்க, நகைகள் கண்டெடுக்கப்பட்டு, அவை அனைத்தும் பெட்டகம் ஒன்றில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. சுமார் 70 தங்க பொருட்கள் மீட்கப்பட்ட பின்னர், நகைகளை அரசிடம் ஒப்படைக்குமாறு மக்கள் எழுதிக் கொடுத்ததுடன், கும்பாபிஷேகத்தின் போது நகைகளை கொண்டு வருவோம் என எழுதித் தருமாறு நகைப்பெட்டகம் வைக்கப்பட்ட போலீசாரின் வாகனத்தையும் கோட்டாட்சியர் வாகனத்தையும் தடுத்து, மக்கள் கேட்டுள்ளனர். இதனால் கோட்டாட்சியர் வித்யா வாகனத்தில் இருந்து இறங்கி 2 கிலோ மீட்டர் வரையில் நடந்தே வட்டாட்சியர் அலுவலகம் சென்று சேர்ந்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் கோட்டாட்சியர் வித்யா, ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது கும்பாபிஷேகத்தின் போது நகைகள் கோவிலுக்கு எடுத்து வரப்படும் என ஊர் மக்களுக்கு எழுத்துப்பூர்வமான உறுதியை மாவட்ட ஆட்சியர் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மற்ற செய்திகள்
