'கொரோனாவால இந்த பழக்கம் வெகுவா குறைஞ்சுடுச்சு'... 'கல்லூரி மாணவர்கள் குறித்த'... 'ஆய்வில் வெளியான ஆறுதல் தகவல்!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா காலத்தில் இளைஞர்களிடையே நிகழ்ந்துள்ள ஒரு நல்ல மாற்றம் குறித்து ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பொதுவாகவே மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து தெரிந்தும்கூட பலரும் அதற்கு அடிமையாகி வருவது தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. மதுப்பழக்கத்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதோடு, அந்த பழக்கத்திற்கு அடிமையாகும் ஒருவர் தற்கொலை வரை செல்லும் அளவுக்கு மனரீதியாகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனாலேயே மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காலத்தில் இளைஞர்களிடையே மதுப்பழக்கம் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸால் பல மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு வரும்போதும், இதுபோல சில நன்மைகளும் நிகழ்ந்துதான் உள்ளது. இந்த காலகட்டத்தில் பலருக்கும் தங்கள் குடும்பத்தினரோடு நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைத்ததோடு, டெல்லி போன்ற பல நகரங்களிலும் காற்று மாசு குறைந்து ஆறுதல் அளித்தது.
இதையடுத்து தற்போது கொரோனா காலத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால் கல்லூரி மாணவர்கள் பெற்றோர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாலும், நண்பர்களை சந்திக்க முடியாமல் போனதாலும் அவர்களிடையே மதுப்பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் பற்றிய இதழின் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதுபற்றி 300க்கும் மேற்பட்ட இளைஞர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா காலத்தில் பெற்றோருடன் இருந்த மாணவர்கள் எடுத்துக்கொண்ட மதுவின் அளவு வெகுவாக குறைந்துள்ளதும், நண்பர்களுடன் இருந்த மாணவர்கள் எடுத்துக்கொண்ட மதுவின் அளவு சற்று அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.