“உண்மையில் நீங்கள் இங்கொரு மாற்றத்தை விரும்பினால்... இதை செய்யுங்கள்...!” - ரஜினியிடம் உருக்கமான கோரிக்கை வைத்த பிரபல திரைப்பட இயக்குனர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டிசம்பர் 3-ம் தேதி பேசும்போது வரும் 2021 ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவதாக ரஜினி அறித்திருந்த நிலையில், ‘அண்ணாத்த’ பட ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் சென்றிருந்தார்.
அங்கு படப்பிடிப்பில் நால்வருக்கு கொரோனா உறுதியானதும் ரஜினி பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு கொரோனா இல்லை என உறுதியானது. எனினும், ரத்த அழுத்தம் சீராக இல்லாததால்ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது உடல் மற்றும் கொரோனா சூழ்நிலையால், தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபடுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை கூறியதாகவும், கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக, “அரசியலுக்கு வந்தே தீருவேன் என வந்து ரசிகர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. என் முடிவு ஏமாற்றமளிக்கும். மன்னித்துவிடுங்கள். என்னால் அரசியலுக்கு வரமுடியவில்லை” என அறிக்கை வெளியிட்டார்.
இதனால் பல ரஜினி ரசிகர்கள் அதிர்ந்துபோயினர். சிலர், “பரவாயில்லை ரஜினி சார் உங்கள் உடல் நலம் தான் முக்கியம்” என்று தேற்றினர். இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோரும் ரஜினியின் இந்த முடிவை பாராட்டியுள்ளனர். இந்த நிலையில் 'கோலி சோடா', ‘பத்து எண்றதுக்குள்ள’ திரைப்படங்களின் இயக்குநர் விஜய் மில்டன் தனது ட்விட்டர் பதிவில், “தைரியமான முடிவு. உங்கள் நிலைப்பாடு எதுவாக இருப்பினும், நாங்கள் உங்களுடன் நிற்போம். ஆனால், ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும். உண்மையில் நீங்கள் இங்கொரு மாற்றத்தை விரும்பினால் உங்கள் ஆதரவை வெளிப்படையாக மக்கள் நீதி மய்யத்துக்கு அறிவியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
முன்னதாக ரஜினியின் இந்த முடிவு குறித்து கமல்ஹாசன் கூறுகையில், “எனது ரஜினி நலமாக இருக்கவேண்டும். அவர் நலமாக வாழ வேண்டும். இவ்வளவுதான் சொல்ல முடியும். சென்னை சென்று ரஜினியை சந்தித்து பேசுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.