"எந்த மிரட்டலுக்கும் பணியவைக்க முடியாது".. "எனக்கு கட்சியும் வேணாம்.. ஒரு கொடியும் வேணாம்!"..அன்று முதல் இன்றுவரை ரஜினியின் பேச்சு.. வசனம்..பாடல்களில் ‘அரசியல்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன்னால் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்று வலியுடன் பகிர்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அரசியலுக்கு ரஜினி வருவது தொடர்பாக 80-களிலிருந்து, ரஜினி விகடனுக்கு அளித்த பேட்டிகளும் முக்கியமானவை. அப்படி1987-ல் வெளியான ஜூனியர் விகடன் பேட்டியில், தன்னை யாரும் எந்த பிரஷருக்கும் மிரட்டலுக்கும் பணியவைக்க முடியாது. யார் பின்னாலும் போக தயாரில்லை என்று ரஜினி குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல் இன்னொரு பேட்டியில், அரசியல் இப்போது அதிதீவிர புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மருந்து மாத்திரையெல்லாம் இதற்கு பத்தாது. ஆபரேஷன் செய்வதுதான் ஒரே வழி என்று கூறியிருந்தார். இப்படி 1990களில் தொடங்கியது ரஜினி அரசியல் எனும் ஃபீவர். பேரன்பு கொண்ட அவரது ரசிகர்கள், ‘தளபதி’ படம் வெளியான சமயத்தில் சில தமிழக மாவட்டங்களில், “வருங்கால முதல்வர்” என குறிப்பிடப்பட்ட ரஜினி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
1992-ஆம் ஆண்டு வாக்கில் ‘அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்’ என்று ரஜினி கூறினார். அதே வருடம் வெளியான `அண்ணாமலை' படத்தில் ‘நான் பாட்டுக்கு என் வேலையை செஞ்சிக்கிட்டு ஒரு வழில போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்... சொல்லாததையும் செய்வேன்’என தமது முதல் அரசியல் நெடி வீசும் வசனத்தை ரஜினி பேசியிருந்தார்.
அதே வருடம் வெளியான உழைப்பாளி படத்தில், “நேத்து கூலி, இன்னைக்கு நடிகன், நாளை...” என்று பாதியில் நிறுத்தியிருப்பார் வசனத்தை. ஆனாலும் நேரடியான அரசியலுக்கு வருவது தொடர்பான ரஜினியின் வசனமாக “நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது... ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்!” என்கிற வசனம் தான் முத்தாய்ப்பாய் அமைந்தது முத்து படத்தில்.
பாடல்களிலும், “உனையாள்வதே பெரும்பாடம்மா.. ஊராள்வதே எனக்கேனம்மா(அதிசய பிறவி - தானந்தன)”, “கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கே(முத்து - குலுவாலிலே)”, “எனக்கு கட்சியும் வேணாம்.. ஒரு கொடியும் வேணாம்(ராஜாதி ராஜா - எங்கிட்ட மோதாதே)” ஆகிய வரிகளுடன் கூடி எழுதப்பட்ட பாடல்கள் ரஜினியின் படங்களில் ரஜினி பாடுவதாய் இடம் பெற்றன.
1996-ல் வெளிப்படையாக அரசியல் பேசிய ரஜினி ஜெயலலிதா, கலைஞர் இருவருடனும் நல்ல நட்பில் இருந்தாலும், தன் அரசியல் மற்றும் கலையுலக நட்பாக சோ ராமசாமியுடன் பயணித்தார்.
பின்னர் நீண்ட இடைவெளிவிட்டு கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி தன் அரசியல் வரவு குறித்த குறிப்பு, 2018ல் அரசியல் பிரவேசம் விரைவில் எனும் அறிவிப்பு, 2019ல் நேரடியான அறிவிப்பு, 2020ல் கட்சி, மக்கள் மன்றம், ஆட்சி எனும் சலசலப்பு மிகுந்த பேச்சுகளுடன் இருந்த ரஜினி இறுதியாக கொரோனா கால சூழல் மற்றும் தம் உடல் நிலை உள்ளிட்டவற்றால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகவும், இந்த முடிவும் ஏமாற்றம் அளிக்கும் ஆனால் தன்னை நம்புபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என்று இறுதி மற்றும் உறுதி முடிவை எடுத்து அறிவித்துமுள்ளார்.

மற்ற செய்திகள்
