ரஜினிகாந்த் ஏன் கட்சி தொடங்கவில்லை?.. ஹைதராபாத்தில் நடந்தது என்ன?.. உண்மையான காரணம் 'இது' தான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரும் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறிய ரஜினி தற்போது திடீரென "கட்சி ஆரம்பிக்கவில்லை" என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், "கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை" என்று தெரிவித்தார். குறிப்பாக ஹைதராபாத்தில் நடந்தது குறித்து விளக்கமாக தெரிவித்துள்ளார்.
அதில், "மருத்துவர்களின் அறிவுரையும் மீறி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி முகக்கவசம் அணிவித்து மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம். ஆனாலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.
உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வித்தனர். எனக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது. ஆனால், ரத்த கொதிப்பில் ஏற்றத்தாழ்வு இருந்தது. அப்படி இருந்தால் என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும்.
ஆகையால் 3 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க நேரிட்டது. படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல்நிலை. இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாத்தான் பார்க்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி 'அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற ரஜினியுடன் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ்தான் துணைக்குச் சென்றார். ரஜினி கொரோனா பரவல் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டபோதும், அப்பல்லோ மருத்துவமனையிலும் ஐஸ்வர்யாதான் உடனிருந்தார்.
உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்திலும் இருந்த தந்தையிடம், "இந்த சூழலில் அரசியல் வேண்டாம். சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்திருப்பதால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் அது பெரும் ஆபத்தை உண்டாக்கிவிடும்.
இப்போதைக்கு அரசியல், கட்சிப்பணிகள் என எங்கேயும் வெளியே போக வேண்டாம். கட்சி, அரசியல் என யோசிப்பதால்தான் உங்களுக்கு ஸ்ட்ரெஸ் கூடி ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது... அதனால் இப்போது அரசியல் வேண்டாம்பா" என கெஞ்சிக்கேட்டிருக்கிறார் என்கிறார்கள் ரஜினி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.
இதேபோல், இரண்டாம் மகள் செளந்தர்யாவும் ரஜினியிடம் இதே கோரிக்கையை வைத்திருக்கிறார். இருவருமே, "உங்கள் உடல்நிலைதான் முக்கியம்... மற்ற எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தவேண்டாம்" என்று ரஜினியிடம் அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
ஜனவரியில் கட்சி தொடங்கும் நாள் பற்றி டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பேன் என்று கடந்த டிசம்பர் 3-ம் தேதி அறிவித்திருந்தார் ரஜினிகாந்த். இந்நிலையில், இப்போது ஏற்பட்டிருக்கும் உடல்நலப்பிரச்னைகள், மகள்களின் வேண்டுகோள் என அனைத்தையும் பரிசீலித்து ரஜினி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.