நடிகர் ரஜினிகாந்த எப்படி உள்ளார்??? - அப்பலோ மருத்துவமனை வெளியிட்ட புதிய மருத்துவ அறிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்திலுள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து இன்றே அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க வேண்டி அவரை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், சிகிச்சை முடிந்து நாளை தான் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். அதே போல ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் நடிகர் ரஜினிகாந்த் நல்ல உடல்நலத்துடன் விரைவில் குணமடைய வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதையடுத்து, படப்பிடிப்பு குழுவில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா நெகடிவ் என முடிவுகள் வந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், மற்றவர்களையும் அவர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார். படப்பிடிப்பு ரத்தானதால் அவர் உடனடியாக சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போது, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
