திடீரென பாஜகவில் இணைந்த ‘மநீம’ கட்சியின் முக்கிய நிர்வாகி.. என்ன காரணம்..? பரபரக்கும் அரசியல் களம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரான அருணாச்சலம் திடீரென பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பொதுச்செயலாளராக இருந்தவர் ஏ. அருணாச்சலம். கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே கமலுடன் இணைந்து பணியாற்றி வந்தார். வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கமலுடன் சேர்ந்து பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சென்னை கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் ஏ.அருணாசலம் இன்று திடீரென பாஜகவில் இணைந்தார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘நான் ஏன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன் என்று கேள்விகள் எழலாம். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொலைநோக்கு பார்வையுடன் விவசாயிகளுக்கு மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நான் ஒரு விவசாயி. விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன்.
எனவே மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் மூலம் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால் இந்த வேளாண் சட்டங்களை ஆதரிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் உயர்நிலைக் கூட்டம் மற்றும் கட்சி தலைவரிடம் முறையிட்டேன். இதுதொடர்பாக பலமுறை எடுத்துரைத்தேன். இந்த சட்டங்களை பாஜக கொண்டு வந்ததாக கருத வேண்டாம். விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வந்ததாக கருதுங்கள் என்று எடுத்துக் கூறினேன்.
மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் அக்கட்சியிலிருந்து விலகி, சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் மற்றும் தமிழக இணைப் பொறுப்பாளர் திரு.சுதாகர் ரெட்டி முன்னிலையில் கமலாலயத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்#JoinsBJP pic.twitter.com/KfK1azrczM
— Dr.L.Murugan (@Murugan_TNBJP) December 25, 2020
ஆனால் அவர்கள் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நலன்களையோ, பாதுகாப்பையோ கருத்தில் கொள்ளாமல் கட்சி அடிப்படையில் முடிவெடுத்தார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியானது திமுகவைப் போல் ஆகிவிடக் கூடாது. இது மய்யமான கட்சி. வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நலன் தரக் கூடியதா, இல்லையா என்று பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. அப்போது நான் ஒரு முடிவெடுத்தேன். விவசாயிகளின் மனசாட்சியாக ஒரு தொண்டனாக பாஜகவில் வந்து இணைந்து கொண்டேன்’ என அவர் கூறினார்.

மற்ற செய்திகள்
