#VIDEO: “ரசிகர்கள் கோபமா இருந்தா என்ன?.. தம்பி சூர்யா அளவுக்காச்சும் விஜய் இதை செய்யணும்!” - சர்ச்சை பேச்சுக்கு சீமான் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர்கள் குறிப்பாக ரஜினி, கமல் முதலானோரின் அரசியல் வருகை குறித்து விமர்சித்த சீமான் விஜய் உட்பட எந்த நடிகனுக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் வரக்கூடாது என்று பேசியது விஜய் ரசிகர்களுக்கு மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியிருந்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களிடையே பேசிய சீமான், “எடப்பாடி பழனிசாமி கொடுக்கும் 2500 ரூபாயை வைத்துதான், ஒருவர் இந்த நாட்டில் பொங்கல் கொண்டாட முடியும் என்பது மாதிரியான ஒரு நிலைமையில் தான் இந்த நாடு இருக்கிறதா? அந்த பணத்தை எந்த கணக்கில் கொடுக்கிறார் என்பது பற்றிய விளக்கம் இருக்கிறதா?
எம்ஜிஆரை தாண்டி அரசியல்வாதிகளே இல்லையா? கக்கன், காமராஜர், ஜீவானந்தம் ஆகிய எங்களது தாத்தாக்கள் இருந்தனர். எங்கள் அப்பா நல்லகண்ணு வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர்களை தாண்டிய புனிதமான அரசியல் தலைவர்கள் உண்டா? தமிழர்களுக்கு ரோல் மாடலே இல்லை என்பதுபோல் எம்ஜிஆர் மாதிரி ஒருவர் வர வேண்டும், ரஜினி வர வேண்டும் என்பது போன்ற பேச்சுக்கள் எல்லாம் வெறுப்பைத் தூண்டுகின்றதல்லவா? பெரியாரிசம், அண்ணாயிசம் இருக்கும்போது சீமானிசம் இருந்தால் வலிக்கிறதா? என்னதான் உங்கள் பிரச்சனை?
தொடக்க காலத்திலிருந்தே நான் விஜய்க்காக நிற்பவன் என்பது அனைவருக்குமே தெரியும். விஜய் என் தம்பி, விஜய்க்கு இருக்கும் புகழ் வெளிச்சத்திற்கு அவர் குறைந்தபட்சம் சூர்யா அளவுக்காவது சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நான் கூறவில்லை. வந்து களத்தில் நின்று மக்களுக்காகப் போராடி மக்களின் நன்மதிப்பைப் பெற்று அரசியலுக்கு வாருங்கள். வெறும் திரைக் கவர்ச்சியை வைத்துக்கொண்டு அதுவே நாடாள தகுதி என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் என்பதையே நான் வலியுறுத்துகிறேன்.
விஜய் ரசிகர்கள் கோபமாக இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களின் ஆதங்கம் அது. ஒரு நடிகர் நடிப்பது மட்டுமே நாடாள தகுதி உடையது என்று நினைத்துக் கொள்வதை நான் ஏற்க முடியாது. எங்களது கோட்பாடு அதை ஏற்காது.” என்று பேசியுள்ளார்.
சீமான் பேசிய முழுமையான பேட்டியை இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.