"ஒரு பாட்டிம்மா சொல்லிக் கொடுத்தாங்க!".. சாலையில் வடமாநில 'பெண்ணுக்கு பிரசவம்' பார்த்த 'வெற்றிமாறன்' பட 'நாவலாசிரியர்'.. பிரத்தியேக பேட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 19, 2020 10:56 PM

கொரோனா நோய்க் கொடுமையால் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாநகரில் ஒடிசாவைச் சேர்ந்த ஏழைப் பெண்ணுக்கு சாலையோரத்தில் பிரசவம் பார்த்துள்ளார் ஆட்டோ டிரைவரும், சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான மு.சந்திரகுமார். இயக்குநர் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படத்தின் மூலக்கதையான ‘லாக்கப்’ நாவலை எழுதியவர் மு.சந்திரகுமார். எரியும் பட்டத்தரசி உள்ளிட்ட பல நாவல்களை எழுதிய இவர் ஆட்டோ ஓட்டுநராகவும் தன் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

vetrimaran film story writer helps pregnant lady to deliver baby

இந்நிலையில் கைகளில் ஒரு குழந்தையை ஏந்தியபடி இவர் ஒரு வடமாநில பெண்ணுக்கு சாலையிலேயே பிரசவம் பார்த்த வீடியோதான் இணையத்தில் வலம்வருகிறது. இதுபற்றி அவரிடம் பேசியபோது,  தனது ஆட்டோவில் 1990-ஆம் ஆண்டு சுகப்பிரசவம் நடந்ததாகவும், அப்போது அந்த குழந்தையை பெற்றெடுத்த பெண்ணுக்கு ஒரு மூதாட்டி பிரசவம் பார்த்ததாகவும், அதை பின்னாளில் அழகு என்கிற பெயரில் சிறு கதையாக எழுதியதாகவும் கூறினார். “அப்போது அந்த பாட்டிம்மா சொல்லிக் கொடுத்தத நான் இப்ப செஞ்சேன்” என்று கூறி நெகிழ்ந்ததோடு, “இத நான் பெரிய விஷயமாவே பாக்கல., எதுக்காக இப்படி உலகம் இதை கொண்டாடுதுனே தெரியல” என்றும் கூறினார்.

“சரி, இது எப்படி நடந்துச்சு?” என்று நாம் அவரிடம் விவரமாக கேட்டபோது, அவர்  “நம்மூட்டு பக்கத்துலதான் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமிருக்கு. அங்க இருக்குற பொறம்போக்கு நெலத்துல தங்கியிருந்த வடநாட்டு (ஒடிசா) பெண்ணுக்கு பிரசவ வலின்னு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனதாவும் ஆனா வழியிலே வலி வந்துட்டதாவும் தோழர் பழனிசாமி எனக்கு போனில் அழைத்து தகவல் சொன்னார். ஆம்புலன்ஸ் இன்னும் வர்லனு சொன்னார். நான் ஆட்டோவை எடுத்துகிட்டு போனேன். ஆனா அதுக்குள்ள அந்த பொண்ண கட்சி ஆபீஸ் முன்னாடியே படுக்க வெச்சுட்டாங்க. நான் போய் உதவி பண்ணுங்க யாராச்சும்னு கேட்டு பாத்தேன். யாரும் போகாதங்காட்டி அந்த பொண்ணோட கால்மாட்டுல உக்காந்தேன். மொதல்ல கூச்சப்பட்டுக்கிட்டு துணிய மூடுன அந்த பொண்ணு கிட்ட துணியவிடச் சொல்லி இந்தியில சொன்னேன். அப்புறம் எந்த சிக்கலுமில்லாம கொழந்தையை கையில ஏந்திட்டேன். இடையில அங்க நின்ன பெண்கள்கிட்ட ஏம்மா இப்படி நிக்குறீங்க. அந்த பொண்ண புடிங்க. கொழந்தைய வெளில எடுங்கனு சொன்னேன். ஆனா அவங்க எல்லாம் ஆஸ்பத்திரில அரை மயக்கத்துல பிரசவம் பார்க்கப்பட்டவங்க. இப்படி ரத்தம் ஓடுனத பாத்ததே இல்லையாமாம். அதனால பயந்துட்டதா சொன்னாங்க. ஒரு 70 வயசு அம்மா நின்னாங்க. அவங்களோ, யாருடைய உதவியும் இல்லாம கொழந்த பெத்துக்கிட்டவங்கனு சொன்னாங்க. அதனால நானே களத்துல இறங்க வேண்டியதா போச்சு. முன்னாடியே என் மகள் ஜீவாவுக்கு போன் பண்ணியிருந்தேன். அவளும் என்னுடன் இருந்தா. குழந்தையை சந்தோஷத்தோட கையில ஏந்தி, அவதான் இந்த நிகழ்வை பேஸ்புக்ல பதிவா போட்டா” என்று நெகிழ்ந்து கூறினார். 

மேலும் பேசியவர், “தொப்புள் குழாயில குழந்தைக்கான உயிர்ச்சத்து இருக்கும்ங்குறதுனால அத குழந்தை வயிற்றை நோக்கி நசுக்கிட்டே வரணும். அதன் பின் அறுக்கணும். அதுக்கு கத்தி கொண்டுவாங்க யாராச்சும்னு கத்திகிட்டு இருந்தேன். அதுக்குள்ள ஆம்புலன்ஸ் டாக்டரே வந்து ரெண்டு பக்கமும் க்ளிப் போட்டார். கட் பண்ணிட்டார்” என்று கூறியதோடு,  “கடந்த 30 வருஷமா மகள், மகள் வழிப் பேத்தினு பாரம்பரியமா பெண்களுக்கு, சக பெண்கள் சொல்லிக்கொடுக்க வேண்டிய பேரறிவு சொல்லிக் கொடுக்கப்படாமலே இருந்ததால, அவங்களாலேயே அவங்களுக்கு ஆபத்து, அவசர காலத்துல உதவி பண்ணிக்க முடியல. இதனால் பெரிய இடைவெளி விழுந்துருச்சு. அவங்களுக்கு என்ன நடக்குதுனு அவங்களுக்கே தெரியல. அவங்க உடல்நலம் பற்றிய போதிய அறிவுகளில் இருந்து அந்நியப்பட வேண்டிய சூழல் உருவாகிடுச்சு” என்று ஆதங்கப்பட்டார்.