'4 திருமணம்'.. 'நள்ளிரவில் மிஸ்டு கால்'.. சந்தேகப்பட்டு களத்தில் இறங்கிய மனைவிக்கு ஷாக்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 29, 2019 10:56 PM

ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டை ராஜூ. இவரது மகள் கோமளா தேவி மடக்கொட்டான் பகுதியைச் சேர்ந்த ராமுவின் மகன் கங்காதரனை கடந்த 2008-ல் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

TN man cheat by marrying 4 women and ready to give money

இருவருக்கும் குழந்தைகள் உள்ள நிலையில், கோமளாதேவியின் நகைகளை மூலதனமாக வைத்து, வெளிநாட்டு கம்பெனி வேலைகளுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனத்தை துபாயில் தொடங்கி கங்காதரன் நடத்தி வந்தார். ஆனால் அடிக்கடி பல பெண்களுடன் நெருக்கமாக பழகுவதும் பேசுவதுமாய் இருந்த கங்காதரன் மீது பட்டதாரியான கோமளாதேவி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் கங்காதரனோ, கேள்விகேட்ட தன் மனைவி கோமளாதேவியையும் குழந்தைகளையும், மடக்கொட்டானில் உள்ள தனது வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டுச் சென்றார். அவ்வப்போது துபாயில் இருந்து வந்துபோவதுமாக இருந்த கங்காதரனின் போனுக்கு இரவில் ஒருநாள் மிஸ்டு கால் வந்தது. அதை கவனித்த கோமளாதேவி, அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்ட போது, எதிர்முனையில் பேசிய கவிதா, தான் கங்காதரனின் மனைவி என்றும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அதிர்ச்சியின் உச்சத்தை அடைந்த கோமளாதேவி, கங்காதரனின் மொபைலை நோண்டியபோதுதான், கங்காதரன் கோமளாதேவியை தவிர, கவிதா, யமுனா, சென்னையைச் சேர்ந்த தீபா என 4 கல்யாணங்களை பண்ணிக்கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.  இதனையடுத்து கடந்த 2015-ல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸாரோ அவரை எச்சரித்து விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

கங்காதரனும் தான் திருந்திவிட்டதாகக் கூறி, கோமளாதேவியை நம்ப வைத்து மேலும் கங்காதேவிக்கு சொந்தமான கம்பெனி ஒன்றை தன் பெயருக்கு மாற்றியுள்ளார். ஆனாலும் மீண்டும் அவர் செயலின் மீது சந்தேகம் அடைந்த கோமளாதேவி ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கங்காதரனின் மீது முழு ஆவணங்களுடன் புகார் அளித்தபோது, விசாரணையில் கங்காதரன் அனைத்தையும் ஒப்புக்கொண்டதோடு, குழந்தைகள் பெயரில் 10 லட்சம் ரூபாய் டெப்பாசிட் செய்வதாகவும், மனைவிக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் அளிப்பதாகவும், 5 செண்ட் நிலம் எழுதித் தருவதாகவும் வாக்கு கொடுத்துள்ளார். இதனால் இந்த வழக்கு கட்டப்பஞ்சாயத்து செய்யப்பட்டு முடிந்துள்ளதாக பலரும் பேசி வருகின்றனர்.

Tags : #FRAUDSTER #CHEAT #MARRIAGE