தமிழகத்திற்கு 'கொரோனா' தடுப்பு நிதியாக '500' கோடி 'ரூபாய்' அளித்த 'மத்திய' அரசு... இன்னும் அதிக 'நிதி' தேவை... பிரதமருக்கு கோரிக்கை விடுத்த 'தமிழக' முதல்வர்!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தடுப்பு சிறப்பு நிதியாக தமிழக அரசுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் இன்னும் வேண்டும் என பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் 10 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'தமிழகத்தில் சிகிச்சை தரும் மருத்துவமனைகளில் உயர்தர வெண்டிலேட்டர் தேவை. அதனால் தமிழக அரசுக்கு உயர்தர வெண்டிலேட்டர்களை வழங்க வேண்டும்' என்றார்.
மேலும், 'தமிழகத்திற்கு மத்திய அரசு சார்பில் சுகாதார திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 712.64 கோடி ரூபாயில் இருந்து தமிழகத்திற்கு 512.64 கோடி ரூபாய் மட்டும் வந்துள்ளது. ஏற்கனவே, தமிழக அரசுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரியிருந்தோம். அந்த தொகையையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும். அதே போல, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை விரைவாக தமிழகத்திற்கு தர வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இடைக்கால நிவாரணமாக ரூ.1000 கோடியையும் மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திற்கு தொழில் வளர்ச்சி வங்கி ரூ.1000 கோடி தருமாறு அந்த வங்கிக்கு உத்தரவிட வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வரை கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இரண்டரை லட்சம் பேர் வரை குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
