’அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில்... ’தமிழகம்’ தான் டாப்! ’லாக்டெளன்’ காலத்திலும்... வளர்ச்சி பாதையில் ’முன்னேறும்’ தமிழ்நாடு...!’ - ஆய்வு முடிவில் வெளியான தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல, அனைத்து பணிகளும் முடங்கிப் போயுள்ளன. சிறு வணிகர்களின் தொழில் மொத்தமாக தொலைந்து போய் விட்டது. கோடிக்கணக்கான மக்களும் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், நாட்டிலேயே அதிக புதிய முதலீடுகளை பெற்று தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தனியார் நிறுவன திட்ட ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மும்பையிலுள்ள 'ப்ராஜக்ட்ஸ் டுடே' (Projects Today) என்ற திட்ட கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் ஆய்வறிக்கை படி, ஊரடங்கு ஆரம்பித்த ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களின் இடைக்காலத்தில் ரூ. 97 ஆயிரத்து 859 கோடி முதலீடுகளுக்கான சுமார் 1200 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள தகவல் தெரிய வந்துள்ளது.
பல மாநிலங்களில் பொருளாதார எழுச்சி பெறும் வகையில் பல்வேறு தொழில் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளில், நாட்டிலேயே அதிக முதலீடு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு அறியப்பட்டுள்ளது. தமிழக அரசு சமீபத்தில் ரூ.18 ஆயிரத்து 236 கோடி முதலீடுகளுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் (11 ஆயிரத்து 229 கோடி புதிய முதலீடுகள்) உள்ளது.
உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், தெலுங்கானா, குஜராத், ஒடிசா, ஆந்திர பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கடந்த ஆண்டு இதே மாதங்களில் ரூ.3 லட்சத்து 86 ஆயிரத்து 673 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கான 2,500 புதிய திட்டங்கள் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.