‘உடனே ஊரடங்கை நிறுத்தணும்’.. மிரட்டிய ‘போதைப்பொருள்’ கும்பல்.. மறுத்த மேயருக்கு நடந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Apr 10, 2020 02:32 PM

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பித்த மேயரை போதைப்பொருள் கும்பல் சுட்டுக்கொலை செய்த சம்பவம் மெக்சிக்கோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mexican mayor shot dead by drug gang for coronavirus lockdown

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் தினமும் கொரோனா வைரஸால் மக்கள் உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பென் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதேபோல் அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிக்கோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த நாட்டின் தெற்கு மாகாணமான குயின்டானரூவில் உள்ள மகஹூல் நகர மேயர் ஓபிட் துரோன் கோமஸ், தனது நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதனால் அந்த நகரின் போக்குவரத்து முடக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டிருப்பதால் அந்த நகரை சேர்ந்த போதைப்பொருள் கும்பல்களால் பிற நகருக்கு போதைப்பொருள் கடந்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து தடையை உடனடியாக நீக்கும்படி மேயர் ஓபிட் துரோன் கோமசுக்கு போதைப்பொருள் கும்பல்கள் கொலை மிரட்டல் விடுத்தன. ஆனால் மேயர் ஓபிட் துரோன் அதை பொருட்படுத்தவில்லை.

இந்த நிலையில் ஊரடங்கின் நிலைமை குறித்து கண்காணிப்பதற்காக மேயர் மினிபேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார். இதை அறிந்த போதைப்பொருள் கும்பல் காரில் வந்து பேருந்தை வழிமறித்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த மேயர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.