'யாரும் இத செய்யாதீங்க'...'கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 10, 2020 04:17 PM

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி? என்று பா.ஜனதா எம்.பி.யின் மகள் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

BJP MP\'s Daughter Tells What Helped Her Fight COVID-19

கர்நாடக மாநில பாரதிய ஜனதா எம்.பி.யாக இருந்து வருபவர் சித்தேஷ்வர். இவரது மகள் அஷ்வினி. இவர் தனது மகள் மற்றும் கணவருடன் கயானா நாட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் இவர் கயானா நாட்டில் இருந்து தனது மகளுடன் இந்தியா திரும்பினார். அதையடுத்து அவருக்கும், அவருடைய மகளுக்கும் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். மருத்துவ பரிசோதனையில் அஷ்வினிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவ குழுவினர் தாவணகெரேவில் உள்ள எம்.எஸ். தனியார் மருத்துவமனையில் தனிமையில் வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், கொரோனா வைரஸ் நோயில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி என்றும், தான் தனிமைப்படுத்தப்பட்ட தருணத்தை எப்படி எதிர்கொண்டார் என்பது குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''கொரோனாவில் இருந்து விடுபட முடியாது என்று யாரும் பயப்பட தேவையில்லை. மன உறுதியோடு போராடினால் கொரோனாவில் இருந்து குணமடைய முடியும். மருத்துவமனையில் மருத்துவர்கள் எனக்கு தரமான சிகிச்சையினை அளித்தார்கள். 14 நாட்கள் என்னை டாக்டர்கள் தனிமையில் இருக்க சொன்னபோது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் அந்த சவாலான நேரத்தில் தனிமையில் இருந்ததால்தான் நான் பூரண குணமடைந்தேன்.

டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்றுக்கொண்டேன். நமது உடல்நலத்தை பாதுகாப்பது நம்முடைய முக்கிய கடமை. நான் தனிமையில் இருந்தாலும் என்னுடைய நம்பிக்கையை நான் விட்டுவிடவில்லை. எனது நண்பர்கள், உறவினர்கள் என பலரும் என்னுடன் தினமும் தொலைபேசியில் பேசி எனக்கு தைரியம் ஊட்டினார்கள். நானும் தனிமை நேரத்தை வீணடிக்காமல் யோகா பயிற்சியில் ஈடுபட்டேன். நம்பிக்கையுடனும், வலிமையுடனும் இருந்தேன்.

தற்போது பூரண குணமடைந்து குடும்பத்தாருடன் பத்திரமாக இருக்கிறேன். எனவே யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். உங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். உங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் பார்த்து கொள்ளுங்கள். அதுமட்டும் நீங்கள் செய்தால் போதும்'', என அந்த வீடியோவில் அஷ்வினி கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.