‘ஊரடங்கால் விளைந்த நன்மை’... 'கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதில்'... ‘அடுத்த சில வாரங்கள்’... 'மருத்துவத் துறை நிபுணர்கள் கருத்து'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் முன்கூட்டியே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் உயிரிழப்பு விகிதம் 50% அளவு குறைக்கப்பட்டிருப்பதாகக் மருத்துவத் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா குறித்த ஆன்லைன் கருத்தரங்கு ஒன்றில் மருத்துவத் துறை வல்லுநர்கள் பங்கேற்று கருத்து தெரிவித்தனர். அப்போது நாராயண ஹாஸ்பிடல்ஸ் குழுமத் தலைவர் டாக்டர் தேவி பிரசாத், ‘கொரோனா அதிகம் நிறைந்த ஹாட்ஸ்பாட் (டெல்லி, மும்பை போன்ற பகுதிகள்) தவிர்த்த மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகளை முழுமையாக தொடர்வதற்கு மருத்துவரீதியான காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை’ என்று கூறினார். பின்னர் பேசிய டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப், ‘அடுத்த சில வாரங்கள் சவால் மிகுந்தவை.
ஹாட்ஸ்பாட் பகுதிகளில் இருந்து பிற பகுதிகளுக்கு கொரோனா பரவுவதை தடுப்பதே அடுத்த சில மாதங்களுக்கு சவாலான பணி என்றும், தற்போது உடனடியாக நிலைமை சீராகாது’ என்றும் கூறியுள்ளார். ‘கொரோனா பரவுதலில் இந்தியா இன்னும் 2-வது நிலையில் தான் இருக்கிறது என்றும், ஹாட்ஸ்பாட்டுகளில் மட்டும் 3-ம் நிலையின் ஆரம்ப விளிம்பில், அதாவது 2-ம் நிலைக்கும், 3-ம் நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். ஆனால் ‘தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது அடிக்கடி கை கழுவுவதன் மூலமே, கொரோனா பரவுதலை கட்டுப்படுத்துவது சாத்தியம்’ என அவர் கூறியுள்ளார்.
