'லாக் டவுன் தொடருமா?'... ஏப்ரல் 14க்கு பிறகு என்ன செய்யப்போகிறது அரசு?... கொரோனாவை ஒழிக்க... ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த போதுமானதாக இருக்காது என்றும், அதற்கு தீர்வாக மாற்று திட்டங்களையும் பிரபல கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது தற்போது பேசு பொருளாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு 'லாக் டவுன்' உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 வரை அமலில் இருக்கும் இந்த 'லாக் டவுன்' மேலும் நீட்டிக்கப்படலாம் என்று பல்வேறு கருத்துகள் உலா வந்தன. ஆனால், ஏப்ரல் 14ம் தேதிக்குப் பின்னர், இந்த 'லாக் டவுனை' நீட்டிக்கும் எண்ணம் தற்போது இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், இந்தியாவைச் சேர்ந்த ராஜேஷ் சிங், அதிகரி என இரு மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அவர்கள் கணிதத்தில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, நம் நாட்டின் சமூகக் கட்டமைப்புகள், மக்கள் தொகை, மக்களின் வாழ்வியல் ஆகியவற்றை அடிப்படைக் கூறுகளாகக் கொண்டு, கணித ரீதியில் ஒரு தீர்வை முன்வைத்துள்ளனர்.
அவர்கள் வகுத்த திட்டத்தின் கணிப்புகள் பின்வருமாறு:-
முதலாவதாக, தற்போது லாக் டவுன் அமலில் இருப்பதால், இந்த காலகட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, லாக் டவுன் முடிவில் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. ஆனால், அதன் பின்னர், இந்தியாவின் சமூகக் கூறுகளை வைத்துப் பார்க்கும் போது, ஏப்ரல் 14க்கு பின் மீண்டும் கொரோனா பரவ வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இரண்டாவதாக, 21 நாள் லாக் டவுன் முடிந்த பின், 5 நாட்கள் இடைவெளி விட்டு, மீண்டும் 2வது முறையாக 28 நாட்களுக்கு லாக் டவுன் அமல்படுத்தலாம். ஆனால், அப்படிச் செய்தாலும் 2வது லாக் டவுன் முடிந்த பிறகு, மீண்டும் கொரோனா தலை தூக்கும் அபாயம் உள்ளது.
மூன்றாவதாக, 21 நாள் லாக் டவுன் முடிந்த பிறகு, 5 நாட்கள் இடைவெளி விட்டு, மீண்டும் 2வது முறையாக 28 நாட்களுக்கு லாக் டவுன் அமல்படுத்த வேண்டும். அதன் பிறகு, மீண்டும் 5 நாட்கள் இடைவெளி விட்டு 18 நாட்களுக்கு 3வது முறையாக லாக் டவுன் அமல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், கொரோனா பரவல் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் எனக் கணித்துள்ளனர்.
நான்காவதாக, தற்போது இருக்கும் 21 நாள் லாக் டவுனை 49 நாட்களாக நீட்டித்தால், கொரோனா வைரஸ் பரவல் முற்றிலுமாக நம் நாட்டில் இருந்து ஒழிக்கப்படும் என்று கணக்கிட்டுள்ளனர்.
இவை அனைத்தும், கேம்பிரரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்களின் கணிதத் தீர்வுகள் (அ) கணிப்புகள் ஆகும்.
இந்திய அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த லாக் டவுனை நீட்டிக்குமா, அல்லது வேறு திட்டங்களை வைத்துள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
