சிசிடிவி கேமராவில் டம்ளர்.. டாஸ்மாக் சுவத்துல ஓட்டையை போட்டு ஆட்டை.. யாருசாமி இவங்க.?
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருத்தணி அருகே டாஸ்மாக் கடையில் சுவற்றில் துளையிட்டு விலை உயர்ந்த மதுபான பாட்டில்களை திருடி சென்ற கும்பலை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
சமீப ஆண்டுகளில் சிசிடிவி கேமராக்களின் பயன்பாடு பரவலாக அதிகரித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். நகரங்கள் மட்டுமல்லாது கிராமங்களிலும் தற்போது சிசிடிவி கேமராக்களின் பயன்பாடு வந்துவிட்டது. திருட்டு உள்ளிட்ட குற்றவியல் சம்பவங்களிலிருந்து மக்களை பாதுகாக்க சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. அதே நேரத்தில் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியிலும் காவல்துறைக்கு இந்த கேமராக்கள் பெரிதும் உதவிகரமானதாக இருக்கின்றன. அந்த வகையில் திருத்தணி அருகே நடந்துள்ள ஒரு சம்பவம் பலரையும் திடுக்கிட செய்திருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்துள்ள மாமண்டூர் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இந்த கடையில் கொள்ளை சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்குள்ள சிசிடிவி கேமராவில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அந்த கொள்ளையர்கள் அதனை டம்ளர் போட்டு மூடி இருக்கின்றனர். அதன் பிறகு டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு விலை உயர்ந்த மதுபான பாட்டில்களை அந்த கும்பல் திருடி சென்று இருக்கிறது. கடைக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவை அந்த கும்பல் உடைத்து தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
மேலும், கடையின் ஓரமாக வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை உடைத்தும் அந்த கொள்ளையர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதனிடையே நள்ளிரவு கனகம்மா சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இதனையடுத்து, கடைக்கு சென்ற போலீசார் கடையில் களவு போயிருப்பதை அறிந்து உள்ளனர். இந்நிலையில், டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்.
திருத்தணி அருகே சிசிடிவி கேமராவை டம்ளரால் மூடிவிட்டு டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | Life-ல முதல் தடவை பனியை பார்த்த ஒட்டகம்.. குஷியில் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ..!