அப்பாவுக்கு தெரியாமல் புது போன் வாங்கிய மாணவி.. வலைவீசிய மர்ம கும்பல்.. அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி.. பகீர் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலத்தில் இளம்பெண்ணிடம் ரூபாய் 16 லட்சத்தை சுருட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் யாமினி. இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் ஹாஸ்டலில் தங்கி பயின்று வருகிறார். பணம் தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளும் விதத்தில் இவருடைய தந்தை தனது ஏடிஎம் கார்டை மகளிடத்தில் கொடுத்து வைத்திருந்திருக்கிறார். சொந்த ஊரில் வீடுகட்ட சுமார் 20 லட்ச ரூபாயை தனது அக்கவுண்டில் வைத்திருக்கிறார் யாமினியின் தந்தை. இந்நிலையில், சமீபத்தில் அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்க வங்கிக்கு சென்றிருக்கிறார் யாமினியின் தந்தை.
அப்போது, வங்கிக்கணக்கில் இருந்து 16 லட்சத்தி 80 ஆயிரம் ரூபாய் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து வங்கி அதிகரிகளிடத்தில் கேட்டிருக்கிறார். அப்போது ஏடிஎம் வாயிலாக பணம் எடுக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். உடனடியாக இதுகுறித்து தனது மகள் யாமினியிடம் போனில் பேசியிருக்கிறார். அப்போது, முன்னுக்கு பின் முரணாக அவர் பதில் அளிக்கவே சந்தேகம் அடைந்த தந்தை உடனடியாக வீட்டுக்கு வரும்படி கூறியிருக்கிறார்.
ஆனால் யாமினி வீட்டுக்கு வரவில்லை. மாறாக அவருடைய போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் அதிர்ந்துபோன தந்தை இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் தோழி வீட்டில் தங்கியிருந்த யாமினியை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
அப்பாவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புது போன் ஒன்றை யாமினி வாங்கியதாக தெரிகிறது. ஆனால், பணம் எடுக்கப்பட்டது குறித்து தந்தை கேட்பார் என அச்சமடைந்த அவர் வீட்டுக்கு தெரிவதற்குள் பணத்தை ஏற்பாடு செய்ய நினைத்திருக்கிறார். அப்போதுதான் ஆன்லைனில் ஒரு விளம்பரத்தை பார்த்திருக்கிறார். அதில் ஒரு கிட்னியை தானமாக கொடுத்தால் 6 கோடி ரூபாய் வரையில் பணம் தருவதாக குறிப்பிடப்பட்டு இருந்திருக்கிறது.
இதனையடுத்து அதில் இருந்த நம்பருக்கு போன் செய்திருக்கிறார் யாமினி. அப்போது, அறுவை சிகிச்சைக்கு முன்னர் 3 கோடியும், பின்னர் 3 கோடியும் கொடுப்பதாக மர்ம நபர்கள் கூறியிருக்கின்றனர். இதற்கு யாமினி ஓகே சொல்லவே, அவருடைய பெயரில் அக்கவுண்ட் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதில் 3 கோடி ரூபாய் பணம் செலுத்தப்பட்டதாக போலியான ஆவணங்களை அந்த கும்பல் அனுப்பியிருக்கிறது. இதனை அவரும் நம்பியிருக்கிறார்.
ஆனால், அந்த பணத்தை எடுக்க வேண்டும் என்றால் வரி கட்ட வேண்டும் என கூறி பணம் கேட்டிருக்கிறது அந்த கும்பல். இப்படி 16 லட்ச ரூபாய் வரையில் யாமினி அந்த மர்ம கும்பலுக்கு அனுப்பியிருக்கிறார். இதனிடையே தான் அவரது தந்தை பணம் காணாமல்போனது குறித்து கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த யாமினி, தனக்கு சேரவேண்டிய பணத்தை கொடுக்குமாறும் இல்லையென்றால் தான் அனுப்பிய பணத்தை மட்டும் திரும்ப கொடுத்துவிடும்படி கேட்டிருக்கிறார்.
அப்போது, டெல்லியில் உள்ள அலுவலகத்தில் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி சொல்லியிருக்கிறது அந்த மோசடி கும்பல். உடனடியாக ரயில் மூலமாக டெல்லி சென்று விசாரித்த போதுதான் அப்படி ஒரு அலுவலகமே இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. மேலும் யாமினிக்கு தான் ஏமாற்றப்பட்டது புரிந்திருக்கிறது. இதனையடுத்து, குண்டூரில் உள்ள தனது தோழி வீட்டுக்கு திரும்பிய அவரை போலீசார் மீட்டிருக்கின்றனர். இதனையடுத்து, தனது தந்தையுடன் எஸ்பி அலுவலகத்தில் இதுபற்றி புகார் அளித்திருக்கிறார் யாமினி. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் யாமினியை ஏமாற்றிய கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.