"மன்னிச்சுடுங்க".. 25 வருடத்துக்கு முன் நடந்த சம்பவம்.. ராகுல் டிராவிட்டிடம் மன்னிப்பு கேட்ட வங்கதேச பயிற்சியாளர்.. !
முகப்பு > செய்திகள் > விளையாட்டு25 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்திற்காக தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும் தற்போதைய வங்கதேச பந்துவீச்சு பயிற்சியாளருமான ஆலன் டொனால்ட்.
1997 ஆம் ஆண்டு இந்தியா - தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடியது. அந்த போட்டியில் டிராவிட்டை களத்தில் சீண்டியிருக்கிறார் டொனால்ட். இதுகுறித்து தற்போது பேசியுள்ள அவர் அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறியிருக்கிறார்.
இதுபற்றி ஒரு பேட்டியில் பேசிய ஆலன்,"டர்பனில் நான் பேச விரும்பாத ஒரு மோசமான சம்பவம் நடந்தது. அவரும் (ராகுல் டிராவிட்) சச்சினும் எங்களை திணறிடித்துக்கொண்டிருந்தனர். நான் கொஞ்சம் எல்லை மீறினேன். ராகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு. நான் வெளியே சென்று ராகுலுடன் அமர்ந்து அன்று நடந்ததற்கு அவரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். உண்மையில் அவரது விக்கெட்டிற்காக முட்டாள்தனமான ஒன்றை நான் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அன்று நான் கூறியதற்கு இன்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்ன ஒரு பிளேயர் அவர். எனவே ராகுல், நீங்கள் இதை கேட்கிறீர்கள் என்றால். உங்களுடன் ஒருநாள் டின்னர் சாப்பிட விரும்புகிறேன்" என புன்னகையுடன் கூறியிருக்கிறார்.
இந்த வீடியோவை டிராவிட் பார்க்கும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அப்போது, சிரிப்புடன் அந்த வீடியோவை பார்க்கும் டிராவிட்டிடம்,"நீங்கள் அவருடன் டின்னர் செல்ல விரும்புகிறீர்களா?" என அங்கிருக்கும் தொகுப்பாளர் கேட்கிறார்.
அதற்கு சிரித்தபடியே பதில் சொல்லும் டிராவிட்,"நிச்சயமாக செல்வேன். அதுவும் அவர் அதற்கு பணம் செலுத்தினால் கண்டிப்பாக செல்ல வேண்டியதுதான்" என்கிறார். இதனை கேட்டு அந்த தொகுப்பாளரும் சிரிக்கிறார். இந்த வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.