கொரோனா 'நோயாளி' சொல்லி தப்பிச்சேன் ஆனா... 'அந்த' விஷயத்துல கோட்டை விட்டுட்டேன்... 'மீன் குழம்பு' திருடன் சிக்கிய பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்
கன்னியாகுமரி பகுதியில் மீன் குழம்பை சாப்பிட்டு சிக்கிய திருடனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
கன்னியாகுமரி பகுதியில் திருடன் ஒருவன் கடந்த 2 நாட்களாக வீடுகளை கொள்ளையடிக்க முயன்று வருவதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.
அதில் வாலிபர் ஒருவர் சசுவர் ஏறிக்குதித்து ஒவ்வொரு வீடாக செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மொட்டை மாடியில் ஒருவர் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருந்ததாக தக்கலை போலீசில் ஒருவரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் தான் கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் திருட முயன்றவர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு உண்மைகள் தெரிய வந்தன. கேரளா மாநிலம் நெடுங்காடு பகுதியை சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் சதீஷ். பிரபல கொள்ளையனான இவர் கன்னியாகுமரி பகுதியை குறிவைத்து கொள்ளையடிக்க வந்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து திருட முயன்றுள்ளார். ஆனால் பணம், நகை எதுவும் சிக்கவில்லை. அப்பகுதிலேயே பதுங்கி இருந்த சதீஷை பொதுமக்கள் சந்தேகத்துடன் பார்க்க அவர்களிடம் தான் ஒரு கொரோனா நோயாளி என்று கூறி தப்பி சென்றுள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சங்கர் என்பவரது வீட்டில் இரவு நேரத்தில் திருட சென்றுள்ளார்.
ஆனால் அங்கும் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது வீட்டில் இருந்த மீன் குழம்பையும், சாப்பாடையும் எடுத்துச்சென்று மொட்டை மாடியில் வைத்து சாப்பிட்டு தூங்கி விட்டார். மறுநாள் இவரது குறட்டை சத்தம் கேட்ட பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்து இருக்கின்றனர்.
தற்போது சங்கர் அவரது மனைவி பாக்கியம் இருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சதீஷை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். கொரோனா நோயாளி என்று பொய் கூறி தப்பித்த சதீஷ், குறட்டை விட்டு மாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.