200 கேமராக்கள்... வீட்டை பூட்டி குடும்பத்தினருக்கு 'தீ' வைத்து... சைக்கிளில் தப்பிச்சென்றவர் கைது... 'அதிர்ச்சி' வாக்குமூலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொல்கத்தா ஹவுராவைச் சேர்ந்தவர் கொரசா பேகம் (40). இவரின் முதல் கணவரின் மகன் அக்ரம் மல்லிக் (22), மகள் மஹிதா பாசும் (14). முதல் கணவரைப் பிரிந்த கொரசா பேகம், 2-வதாக மக்ஃபுல் அலி சர்தார் (40) என்பவரை திருமணம் செய்துகொண்டார். கொல்கத்தாவில் இருந்து சில வருடங்களுக்கு முன் சென்னை வந்தவர்கள் மதுரவாயலை அடுத்த புளியம்பேடு பகுதியில் வீடு எடுத்து தங்கினர். மக்ஃபுல் அலி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இதற்கிடையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. உச்சகட்டமாக கடந்த 7-ம் தேதி வீட்டுக்கு வந்த மக்ஃபுல் அலி பெட்ரோலை ஊற்றி 3 பேர் மீதும் தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்,பக்கம் இருந்தவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்க அங்கு இறுதி வாக்குமூலம் அளித்துவிட்டு கொரசா பேகம் இறந்து விட்டார். அக்ரம் மல்லிக்கும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மகள் மஹிதா பாசும் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து கொலையாளி மக்ஃபுல் அலியை போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். தற்போது அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விசாரணையில் ஊரடங்கு நேரத்தில் சாப்பாடு போடாமல் விரட்டி விட்டதால் 2-வது மனைவி அவருடைய மகன், மகள் ஆகியோரை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்து இருக்கிறார். மதுரவாயலில் இருந்து சைக்கிளில் தப்பிச்சென்ற மக்ஃபுல் அலி சுமார் 30 கி.மீ சைக்கிளில் சுற்றி திரிந்துள்ளார். 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
