‘இயற்கை உபாதை’ கழிக்க சென்ற சாஸ்தா கோயில் காவலாளிக்கு நேர்ந்த சோகம்.. தேனி அருகே அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆண்டிபட்டி அருகே பாறையை உடைக்க வைக்கப்பட்ட வெடியால் சாஸ்தா கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை - போடி அகல ரயில் பாதைக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. முதற்கட்டமாக மதுரை - உசிலம்பட்டி வரையிலான பணிகள் முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டமும் நடைபெற்று முடிந்துள்ளது. இதனை அடுத்து இரண்டாம் கட்ட பணியாக, உசிலம்பட்டி முதல் தேனி வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் உள்ள பாறைகளை உடைக்கும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்றுவருகிறது. நேற்று முன்தினம் பாறைகளை உடைக்க வெடி வைத்துள்ளனர். இதனை அறியாத கணவாய் சாஸ்தா கோயில் காவலாளிகளான சிவராமன் (40), ஆண்டி (37) ஆகியோர் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடித்த வெடியால் பாறைகள் பறந்துவந்து இருவர் மீதும் கடுமையாகத் தாக்கியுள்ளது.
இதில் சிவராமனுக்கு காலிலும், ஆண்டிக்கு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட இருவரும் தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த ஆண்டி மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
