'அப்பாவ போலவே பொண்ணுக்கும் நடந்து போச்சே'... 'சென்னை பெண் விமானிக்கு நடந்த சோகம்'... உருக்கமான பின்னணி தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒடிசாவில் பயிற்சியின்போது ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உருக்கமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலம் பிர்சாலாவில் அரசு விமான பயிற்சி கல்வி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான விமான தளத்தில் சிறிய ரக விமானம் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று காலை வழக்கம்போல் சிறிய ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. அந்த நேரம் பார்த்து எதிர்பாராதவிதமாக ஒரு விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் விமானத்திலிருந்த விமானி மற்றும் பயிற்சி விமானி ஆகிய இருவருமே விபத்தில் பரிதாபமாக இறந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா(20) பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் விமான நகரைச் சேர்ந்த அனீஸ் பாத்திமாவின் உடலைச் சென்னைக்குக் கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
அவரது சகோதரர் அனுப் ஒடிசா சென்றுள்ளார். மேலும் அனீஸ் பாத்திமாவின் உடலைச் சொந்த ஊரான ராஜாப்பாளையம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே அனீஸ் பாத்திமாவின் தந்தை முகமது வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் உயர் காவல் பயிற்சியகத்தின் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
அவரும் பணியில் இருக்கும் போது, உதவி ஆய்வாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும்போது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தந்தையைப் போலவே மகளும் பணியில் இருக்கும்போது உயிரிழந்த சம்பவம், பொழிச்சலூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.