'சிவப்பாக மாறிய தாமிரபரணி...' 'இதனால' தான் கலர் மாறியிருக்கு...! அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாமிரபரணி ஆற்றின் நீர் தீடீரென சிவப்பு நிறமாக மாறியதால் பொதுமக்கள் குடிக்க அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நீர் வண்ணம் மாறியதற்கான காரணத்தையும் நெல்லை மாவட்ட ஆட்சியர் விளக்கியுள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக எல்லையான பூங்குளம் பகுதியில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக ஓடி புன்னக்காயல் என்ற இடத்தில் தமிழக எல்லையிலேயே கடலில் கலக்கிறது.
தாமிரபரணி ஆற்றில் ஓடும் நீரானது இரு மாவட்டங்களின் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பயன்படுகிறது. தற்போது சில நாட்களாக ஆற்று நீர் சிவப்பு நிறமாக மாறியதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
மேலும் கொரோனா ஊரடங்கால் தொழிற்சாலைகள் இயங்காததால் கழிவு நீர் கலக்கவும் வாய்ப்பில்லை என்பதால், நிறம் மாறிய காரணம் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வரையிலும் ஆற்றின் நிறம் மாறியிருக்கிறது.
இதனால் தூத்துக்குடியைச் சேர்ந்த `எம்பவர்’ சுற்றுச்சூழல் அமைப்பின் இயக்குநர் சங்கர், தமிழக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட அறிக்கையில், ஆற்றில் குறைவான நீரே காணப்படுவதால், விவசாய தேவைகளுக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பாபநாசம் அணையின் அடிப்பகுதியில் உள்ள மதகில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது. அதன் கீழ் பகுதியில் உள்ள சேறு, மணல், மக்கிப் போன மரங்களால் தண்ணீரின் நிறம் மாறியிருக்கிறது. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மேலும் தொடர்ந்து தண்ணீரை ஆய்வு செய்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
