சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன்?.. வீட்டில் இருந்து புறப்படும் முன்... விஜய் எடுத்த அதிரடி முடிவு!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து, நடிகர் விஜய், சைக்கிளில் புறப்பட்டார். ரசிகர்கள் கூடி விடக் கூடாது என்பதற்காக, அவருடன் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் இருசக்கர வாகனங்களில் நெருக்கமாக வந்தனர்.
தனது வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு விஜய் வந்தார்.
அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் போலீஸ் அமைத்திருந்த தடுப்புகளையும் மீறி அருகே வந்துவிட்டனர். பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தி, நடிகர் விஜயை உள்ளே அழைத்துச் சென்றனர். அதன் பிறகு தனது வாக்கை நடிகர் விஜய் பதிவு செய்தார்.
நடிகர் விஜய் வாக்குச் செலுத்திவிட்டு திரும்பியபோது ரசிகர்கள் அதிகளவில் முண்டியடித்ததால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
வாக்களித்த பிறகு, மீண்டும் தனது வீட்டுக்கு சைக்கிளில் செல்ல நடிகர் விஜய் முயன்றார். ஆனால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி நடிகர் விஜய் வீடு திரும்பினார்.
அதைத் தொடர்ந்து, ரசிகர்கள் முண்டியடித்தபடி செல்பி எடுப்பதற்காக ஓடி வந்ததால், கடும் சிரமத்துக்கு இடையே தடுமாற்றத்துடன் இருசக்கர வாகனத்தை அந்த நிர்வாகி ஓட்டினார்.
நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், அதுகுறித்து பல்வேறு கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.
அவர் அணிந்திருந்த உடை, சைக்கிள் ஆகியவற்றை குறியீடாக வைத்து இணையத்தில் பல்வேறு விவாதங்கள் கிளம்பின.
இந்நிலையில், இதுகுறித்து நடிகர் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், "தளபதி விஜய் வாக்கு செலுத்தவிருந்த வாக்குச்சாவடி, அவரது வீட்டுக்கு மிக அருகில் இருந்தது. ஓட்டு போடுவதற்கு காரை பயன்படுத்தினால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே தான் அவர் சைக்கிளில் சென்று வாக்களிக்க முடிவெடுத்தார். வேறு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
