' "அரசியல்ல இருந்து ஒதுங்குறேன்"னு அறிக்கை விட்டாங்க'... அதுக்காக இப்படியா நடக்கணும்?.. நொறுங்கிப் போன சசிகலா ஆதரவாளர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொல்லி, பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா வெளியிட்ட அறிக்கையால் மனமுடைந்த போன அவரது ஆதரவாளர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 2017ம் ஆண்டு சசிகலா சிறைக்கு சென்றபிறகு போயஸ் கார்டன் இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. இதனால் அங்கு வசித்த சசிகலா, இளவரசி உள்ளிட்ட 19 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
சசிகலா, இளவரசி ஆகியோர் சிறை தண்டனை முடிந்து விடுதலையாகி உள்ள நிலையில், அவர்களுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அமமுக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே மனு அளித்திருந்தார்.
ஆனால், இதுவரை சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாததால், அமமுக நிர்வாகியும், ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளருமான வைத்தியநாதன் மீண்டும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் சசிகலா, இளவரசியின் பெயர்கள் மட்டுமின்றி, 19 ஆயிரம் அமமுக தொண்டர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் முறையிட்டுள்ளார்.
ஆனால், இறுதிகட்ட வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது சென்னை தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் சசிகலா வசிக்கும் நிலையில், அந்த முகவரியில் இருந்து வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ள அவர் விண்ணப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனினும், கடந்த மார்ச் 3ம் தேதி இரவு, தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா வெளியிட்ட அறிக்கையால் சோர்ந்துபோயிருந்த அவரது ஆதரவாளர்களுக்கு, அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் கூட இல்லாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
