'ஸ்டாலின் வீட்டு கேட்டை தொட முடியுமா'?... 'எனக்கும் ஸ்டாலினுக்கும் உள்ள வித்தியாசம்'... முதல்வர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் ஸ்டாலின் வீட்டின் கேட்டை கூட தொட முடியாது எனத் தேர்தல் பரப்புரையில் முதல்வர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று கூடலூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய முதல்வர், "அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடக்கும் கூட்டம் வெற்றி கூட்டமாகக் காட்சியளிக்கிறது. மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது. இம்முறை கூடலூரில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெறும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கூடலூர் மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.
ஜெயலலிதாவுக்கு பிடித்தமான மாவட்டம் நீலகிரி. இதைத் தனது சொந்த மாவட்டமாகக் கருதியதால், இது பெருமையான மாவட்டமாகும். ஜெயலலிதாவும் இந்த மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். நீலகிரிக்கு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற 45 ஆண்டு கோரிக்கை, ரூ.447 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இதனால், மக்கள் மேல் சிகிச்சைக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. சில பிரச்சினைகளால் இப்பணிகள் தாமதமானது. விரைவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நானே வந்து திறந்து வைப்பேன். 1,519 பழங்குடியினருக்கு 468 ஹெக்டேர் பரப்பளவில் விவசாய நிலம் வழங்கப்பட்டுள்ளது. கூடலூரில் மட்டும் 8 மினி கிளினிக்கள் திறக்கப்பட்டுள்ளன. 37 ஆயிரத்து 500 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.162 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.600 கோடி செலவில் 705 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது. இதனால், சாதி, மத மோதல்கள் இல்லை. பிரச்சினைகள் வந்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுகிறது.
திமுக ஆட்சியில் கடுமையான மின் வெட்டு, அதனால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆனால், தற்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது. கல்வித் தரம் உயர்ந்துள்ளது. திமுக இதை எல்லாம் செய்யவில்லை. சிறந்த நிர்வாகம், ஏராளமான புதிய திட்டங்களால் தமிழகம் வெற்றி நடை போடுகிறது. இதனால் நாட்டிலேயே தமிழகம் முன் மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது.
மேலும் பேசிய முதல்வர், 'நான் உங்களில் ஒருவன், எப்போது வேண்டுமானால் என்னைச் சந்திக்கலாம். ஆனால் மக்களால் ஸ்டாலின் வீட்டின் கேட்டை கூட தொட முடியாது'' எனத் தெரிவித்தார்.