‘அது ரொம்ப நேரம் கழிச்சு தான் தெரிஞ்சது’!.. பாஜக வேட்பாளர் காரில் EVM இயந்திரம் கொண்டு சென்ற விவகாரம்.. எலெக்ஷன் கமிஷன் எடுத்த அதிரடி ஆக்ஷன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅசாமில் பாஜக வேட்பாளர் காரில் வாக்கு இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அசாமில் 39 சட்டமன்ற தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 77 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், அசாமின் ரதாபரி (Ratabari) தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண்-149 இந்திரா எம்.வி பள்ளியில் வாக்குப்பதிவு நடந்தது. இதனை அடுத்து வாக்கு இயந்திரங்களை கட்டுப்பாட்டு அறைக்கு எடுத்துச்செல்ல, பாஜக வேட்பாளரின் காரை தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வாக்கு இயந்திரம் பாஜக வேட்பாளரின் காரில் எடுத்துச்செல்லும் தகவலறிந்த எதிர்க்கட்சிகள் காரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.
வாக்கு இயந்திரம் பாஜக வேட்பாளருக்கு சொந்தமான காரில் எடுத்துச்செல்லப்பட்ட சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரிகள், ‘கட்டுப்பாட்டு அறைக்கு வாக்கு இயந்திரத்தை எடுத்துச்சென்ற கார் பழுதடைந்துவிட்டது. அதனால், அந்த வழியாக வந்த காரில் வாக்கு இயந்திரத்தை கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு சென்றோம். நீண்ட நேரத்துக்கு பின்தான் அது பாஜக வேட்பாளரின் கார் என தெரியவந்தது.’ என விளக்கமளித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
Breaking : Situation tense after EVMs found in Patharkandi BJP candidate Krishnendu Paul’s car. pic.twitter.com/qeo7G434Eb
— atanu bhuyan (@atanubhuyan) April 1, 2021
இந்த நிலையில் வாக்கு இயந்திரத்துடன் பாஜக வேட்பாளரின் காரில் சென்ற தேர்தல் அதிகாரிகள் 4 பேரை இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கும், தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் அலுவலரிடம் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மற்ற செய்திகள்
