'தமிழக மக்கள் மீது பேரன்பு கொண்டவர் பிரதமர்'... 'தமிழகத்திற்கு 1 லட்சம் கோடி'... முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக மக்கள் மீது பேரன்பு கொண்டவர் பிரதமர் மோடி என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரதமர் மோடி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை கோவை வந்த பிரதமர், அங்கிருந்து கேரளா மாநிலம் பாலக்காடுச் சென்றார். அங்கு பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டத்தில் பேசினார்.
பின்னர் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர், பிரதமரின் உழைப்பால் உலக அளவில் இந்தியா பெருமை அடைந்துள்ளது. நல்ல கட்சிகள் இணைந்து சிறப்பான கூட்டணியை அமைத்துள்ளோம்.
தமிழகத்தின் மீது பிரதமர் மோடிக்கு எப்போதுமே பேரன்பு உண்டு. பிரதமர் எப்போதும் மக்கள் நலனுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். மேலும் மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான உறவு இருக்க வேண்டும். மத்திய அரசோடு இணக்கமான உறவு இருந்தால் தான் திட்டங்களைச் செயல்படுத்த முடியும்.
அதேநேரத்தில் கேட்கும்போது எல்லாம் தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களைக் கொடுக்கிறது மத்திய பாஜக அரசு. குறிப்பாகச் சாலைப் பணி திட்டத்திற்காக ரூ.1 லட்சம் கோடியைப் பிரதமர் ஒதுக்கியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பேசிய முதல்வர், தடையில்லா மின்சாரம், சிறந்த உள்கட்டமைப்பால் முதலீடு குவிகிறது எனத் தெரிவித்தார். அதேபோன்று ரூ.1125 கோடி மதிப்பில் திருப்பூரில் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது'' என முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டார்.

மற்ற செய்திகள்
