‘கொரோனாவால் 41 பேர் பலி’... 'அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்’... 'இந்தியாவில் இருந்து செல்வதற்கான விசா வழங்குவது நிறுத்தம்’???
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்குவது 16-ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.
அமெரிக்காவில் கொரோனா வைரசால் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதையடுத்து 50 மில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த 8 வாரங்கள் வைரசை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமான தருணங்களாகும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் அறிவிப்பை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் கொரோனா பரவலாம் என்பதால் வெளிநாட்டு பயணிகளை தடுக்கும் நடவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளது. அவ்வகையில், இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்குவது மார்ச் 16-ம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது. உலகளாவிய கொரோனா அச்சம் காரணமாக, விசா வழங்கும் நடைமுறைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் அறிவித்துள்ளன.