“வீடியோவுல இருப்பது நான் இல்ல.. நியாபகம் இல்ல..”.. கண்கலங்கிய ‘பிறழ்சாட்சி’ சுவாதி.! கோகுல்ராஜ் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தையே உலுக்கிய கோகுல் ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் சுவாதி இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் கோகுல் ராஜ். பொறியாளரான இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் தொட்டி பாளையம் அருகே தண்டவாளத்தில் கோகுல் ராஜின் சடலம் மீட்கப்பட்டு போலீஸ் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. இதில் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
இந்த வழக்கில் கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சுவாதியை மறுவிசாரணை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டதோடு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றனர். இந்நிலையில், இன்று காலை மதுரை உயர்நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்போடு சுவாதி ஆஜர் ஆனார்.
விசாரணையின்போது நீதிமன்றத்தில் சிசிடிவி காட்சி ஒன்று திரையிடப்பட்டது. அப்போது, அதில் இருப்பது தான் இல்லை என கண்கலங்கியபடி சுவாதி சொல்லியிருக்கிறார். இதனை நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர். பிறழ் சாட்சியாக கருதப்பட்டு, மறுவிசாரணை செய்ய வேண்டும் என நீதிபதிகள் சுவாதியை ஆஜராக சொல்லிய நிலையில், வீடியோவில் இருப்பது தான் இல்லை என அவர் சொல்லியது இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கில் வரும் 30 ஆம் தேதி சுவாதி மீண்டும் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.